பிறவி ஜாதி ஒழிய….

சமதர்மம் என்கின்ற வார்த்தை ஒரு பொது வார்த்தை. இது, ஆங்கிலத்தில் உள்ள ‘சோஷலிசம்’ என்னும் வார்த்தைக்கு தமிழ் மொழி பெயர்ப்பாகக் கையாளப்படுகிறது என்றாலும், சோஷலிசம் என்ற வார்த்தையே தேசத்துக்கு ஒருவிதமான அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகிறது. அனேகமாக அவ்வார்த்தை அந்தந்த தேச தகுதிக்கும், சவுகரியத்துக்கும், அரசாங்கத்துக்கும் தகுந்த படிதான் பிரயோகிக்கப்படுகின்றது. சில இடங்களில் சட்டதிட்டங்களுக்கு மீறினதாயும் உள்ள பொருள்களுடன் சமதர்மம் என்கின்ற வார்த்தை பிரயோகிக்கப்படுகின்றது. இங்கு சமதர்மம் என்ற வார்த்தைக்கு, சமூகத் துறையிலும், பொருளாதாரத் துறையிலும், மக்கள் உயர்வு தாழ்வு இல்லாமல் சமத்துவமாய் வாழ வேண்டும் என்பதையே சமதர்மம் என்று நான் கருத்துக் கொண்டு, சமதர்மம் என்கின்ற வார்த்தையை இங்கு பிரயோகிக்கின்றேன்.

ஏனெனில், மற்ற நாட்டில் சமூகத் துறையில் நம் நாட்டில் உள்ளது போன்ற பிறவி, உயர்வு, தாழ்வு பேதம் இல்லை. பொருளாதார சம்பந்தமே பெரிதும் மற்ற நாடுகளில் இருக்கின்றன. நம் நாட்டுச் சமுதாய உயர்வு தாழ்வானது, பிறவியிலேயே வகுக்கப்பட்டு, அதை மதத்தோடு பொருத்தி, அதற்கு அரசியல் பாதுகாப்பளிக்கப்பட்டு இருந்து வருகிறது.

அரசியலில் உள்ள பாதுகாப்பை உடைப்பது என்று முதலில் ஆரம்பித்தால், அதற்கு நம் நாட்டு மக்கள், அதுவும் பொருளாதாரத்தால் மிகவும் நொந்து ஏழ்மை நிலையில் இருக்கும் மத நம்பிக்கை கொண்ட பாமர மக்கள் என்பவர்களே சிறிதுகூட ஒப்பமாட்டார்கள் என்பதோடு மாத்திரமல்லாமல், அவர்களே நமக்கு எதிரிகளாயும் இருப்பார்கள். ஏனெனில், பிறவி காரணமாய் உள்ள உயர்வு தாழ்வு மதத்தில் சம்பந்தப்பட்டு, அம்மதம் பாமர மக்கள் ரத்தத்தில் ஊறி இருக்கிறபடியாலும், அதுவே அரசியலுக்கு ஆதாரமாய் இருப்பதாலும், அதை மாற்றாமல், அதை மாற்றுவதற்குத் தகுந்த முயற்சி எடுக்காமல் மேல்நாட்டுச் சமதர்மம் பேசுவது, பாலைவனத்தில் இருந்து சத்தம் போடுவது போலவே ஆகும். முதலில் சமுதாயத்தில் பிறவியின் பேரால் உள்ள பேதங்களை ஒழித்தாக வேண்டும். அதுவே இந்நாட்டு சமதர்மத்துக்கு முதற்படியாகும்.

நிற்க. பொதுவாகவே சமதர்மம் என்பது எந்தக் கருத்தில் இருந்தாலும், சமுதாயம் முக்கியமானாலும், அதற்குக் கடவுள் உணர்ச்சி, மத நம்பிக்கை என்பவற்றின் எதிராகவே இருந்து வருகின்றன. சர்வதேச மதவாதிகளும் பெரிதும் கடவுள் உணர்ச்சியும், மத நம்பிக்கையையும், சமதர்மத்திற்கு விரோதமானது என்றுதான் சொல்லி இருக்கிறார்கள். ஆதலால், எந்த சமதர்மவாதிக்கும் இதைப் பொறுத்தவரையில் அபிப்பிராய பேதம் இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. இந்த வேலை அபிப்பிராய பேதமில்லாமல் நடந்துதான் தீரும்.

நம் நாட்டிற்கு இன்று முதலில் ஜாதி பேதங்கள் ஒழிந்து, மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்பதான சமதர்ம முயற்சியே முதலில் செய்ய வேண்டியதாயிற்று. ஜாதி, பேதம், பிரிவு ஆகியவை ஒழிந்தால்தான் சமூக வாழ்க்கையில் சமதர்மமாய் மனிதன் வாழ முடியும். பொருளாதார பேதத்துக்கும், சமூக ஜாதி பேத முறைதான் பெரிதும் காரணமாய் காவலாய் இருந்து வந்திருக்கிறது. இன்றும் பெருவாரியான மக்களுக்கு ஜாதி பேதமே, பொருளாதார சமதர்ம முறையை நினைக்கக்கூட இடம் தராமல் அடக்கி வருகின்றதுடன் பொருளாதார பேதத்துக்கு இடமளித்தும் வருகிறது.

எந்தக் காரணத்தைக் கொண்டாவது இன்று நாட்டிலுள்ள பொருள்களையெல்லாம் எல்லா மக்களுக்கும் சமமாக்கி வைத்துவிட்டாலும், நமது ஜாதி முறைகள் மறுபடியும் வெகுசீக்கிரத்தில் பழைய நிலைமையைத்தான் உண்டு பண்ணிவிடும். மற்ற நாட்டு மக்களுக்கு பொருளாதார சமதர்ம உணர்ச்சி ஏற்பட்ட காரணம் எல்லாம், அவர்களின் பிறவியில் கீழ்மேல் நிலை இருக்கும்படியான ஜாதி பேதம் இல்லாததேயாகும். நம் மக்களுக்கு வெறும் பொருளாதார சமதர்மம் சுலபத்தில் புரியவே புரியாது. ஜாதி பேதம் ஒழிப்பது என்ற சமதர்மத்தைச் சொல்லி, பொருளாதார சமதர்மம் சொன்னால்தான் உண்மையாகக் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு உணர்ச்சி உண்டாக்க முடிகின்றது.

ஆகவே, சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற நாம், ஜாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகிற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே, பிறவி ஜாதியை ஒழிக்க வேண்டியிருக்கிறது என்றும், பிறவி ஜாதியை ஒழிப்பதற்கு அதற்கு ஆதாரமான மதத்தைப் பற்றியோ, மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க வேண்டும் என்று சொன்னாலும், அதை நாத்திகம் என்று சொல்லி விடுகிறார்கள். அதனால்தான் சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீரவேண்டி இருக்கிறது.

(குடிஅரசு – 18.6.1949)

படித்தது

ஜாதி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: