கடந்த தினம் எப்.ஐ.சி.சி. நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்தார் குஷ்பு.
அந்த நிகழ்ச்சியில் பேசுகையில், “தமிழகத்தில் உள்ள அனைத்துக் கட்சிகளுமே கற்பு குறித்த விவகாரத்தில் தன்னைக் கைவிட்டு விட்டன, அநீதி இழைத்து விட்டன” என்று கூறியுள்ளார் குஷ்பு.
தொடர்ந்து, “நான் சட்டத்திற்குப் புறம்பாக எதையும் சொல்லி விடவில்லை. உண்மையில், பாதுகாப்பான செக்ஸ் என்ற விஷயத்தில் அரசின் கொள்கையைத்தான் நான் கூறினேன்.
ஒவ்வொரு பெண்ணும், பாதுகாப்பான செக்ஸை மேற்கொள்ள வேண்டும், ஆணுறைகளை, பெண்ணுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்றுதான் நான் சொன்னேன்.
கல்யாணத்திற்கு முன்பு ஒரு பெண் உடலுறவு வைத்துக் கொண்டால் கர்ப்பமடையும் ஆபத்து உள்ளது. அதைத் தடுக்க ஆணுறைகளை பயன்படுத்துவது நல்லது என்றுதான் நான் சொன்னேன். அப்படிச் செய்யாமல் பாதுகாப்பாற்ற முறையில் உடலுறவு வைத்துக் கொண்டால் அந்தப் பெண்ணுக்கு மட்டுமல்லாமல் அவரது குடும்பத்தினருக்கும் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என்பதைத்தான் நான் எடுத்துரைத்தேன்.
இப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தவிர்க்க பாதுகாப்பான செக்ஸே சிறந்த வழி என்றுதான் கூறினேன். இதில் என்ன தவறு இருக்கிறது. ஆனால் பல அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கோரி போராட்டங்கள் நடத்தின.
குறிப்பாக பாமகவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் எனக்கு எதிராக என்னவெல்லாம் செய்ய முடியுமோ, அதை எல்லாம் செய்து விட்டன.
நான் அளித்த பேட்டியில் கூறிய கருத்துக்கள் அனைத்துமே மத்திய அரசின் கருத்துக்கள்தான். அதைத்தான் நான் பிரதிபலித்தேன். இதற்காக மத்திய அரசு மீது இந்த கட்சிகளால் வழக்கு போட முடியுமா? நான் ஒரு பெண் என்பதால் இந்தக் கட்சிகள் என்னைக் குறி வைத்து நடந்து கொண்டன” என்று பேசினார் குஷ்பு.
மேலும் பாமகவும், விடுதலைச் சிறுத்தைகளும் தன் மீது 24 வழக்குகளை போட்டதாகவும் குஷ்பு குற்றம் சாட்டினார்.