அரசை ஏமாற்றிய அமிதாப்பச்சன்!

உத்தர பிரதேசத்தில் உள்ள பராபாங்கி என்ற மாவட்டத்தில் இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் விவசாய நிலங்கள் வாங்கி இருந்தார். அம்மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களை வாங்க சம்பந்தப்பட்டாவர் ஓர் விவசாயியாக இருக்க வேண்டும். அமிதாப் தன்னை ஓர் விவசாயி என போலியாக ஆவணங்களை தயாரித்து ஏமாற்றி அந்த நிலங்களை வாங்கியுள்ளார். இந்த பிரச்சினை தொடர்பாக அந்த மாநிலத்தில் உள்ள பைசாபாத் கோர்ட்டில் பராபாங்கி கலெக்டர் வழக்கு தொடர்ந்தார்.

அமிதாப்பச்சன் தன்னை விவசாயி என்று பொய் தகவல் கொடுத்துள்ளதாக அவர் அந்த மனுவில் கூறினார். இதற்கு பதிலளித்து அமிதாப்பச்சன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில் “தான் ஒரு விவசாயி என்றும் எனவே விவசாய நிலங்களை வைத்துக் கொள்ள தனக்கு உரிமை உண்டு” என்றும்  தெரிவித்தார்.

அமிதாப்பின் பதிலை பைசாபாத் கோர்ட் கடந்த 1-ந் தேதியன்று நிராகரித்தது. அமிதாப்பச்சன் தாக்கல் செய்த ஆவணங்கள் அடிப்படையில் அவர் ஒரு விவசாயி அல்ல என்றும் கோர்ட்டு தெரிவித்தது. இந்த தீர்ப்பை தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்திலும் அமிதாப் போலி ஆவணங்கள் தயாரித்து வாங்கிய அவரின் நிலங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள பாவனா அணை அருகே 20 ஏக்கர் விவசாய நிலங்களை அமிதாப்பச்சன் வாங்கி உள்ளார். அந்த மாநிலத்தின் விவசாய நில சட்டப்படி, விவசாயிகள் மட்டுமே மகாராஷ்டிர மாநிலத்தில் விவசாய நிலங்களை வாங்க முடியும். உத்தரபிரதேசத்தில் வாங்கியதை போலவே மகாராஷ்டிராவிலும் தன்னை விவசாயி என்று பொய் கூறி அரசை ஏமாற்றி நிலங்களை வாங்கி உள்ளார்.

இவ்வாறு அமிதாப் வாங்கிய நிலங்கள் அரசால் விரைவில் பறிமுதல் செய்யப்படும் எனத் தெரிகிறது. மேலும் அவர் மீது போலி ஆவணங்கள் தயாரித்து அரசை ஏமாற்றியதாக கிரிமினல் வழக்கு தொடரப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

புலிகள் தாக்குதலில் 20 இராணுவத்தினர் பலி!

இலங்கையின் வட பகுதியில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இதில் 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.

இலங்கையின் வடக்கு பகுதிகளான வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் ஊடாக இலங்கை ராணுவத்தினர் முன்னேறி வந்தனர். இதையடுத்து அவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த துவங்கினர். அதிபர் ராஜபக்ஷே பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் இரு தரப்பிலும் நடந்து வருகிறது.

நேற்றைய தாக்குதலில் ராணுவத்தை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். விடுதலைப்புலிகள் இந்த த்ஆக்குதலில் ராணுவத்தின் ஒரு முகாமை முற்றிலுமாக அழித்ததோடு, அங்கு இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து ராணுவத்தினர் முழுவதுமாக விரட்டி அடிக்கப்பட்டனர்.

இந்த தகவலை விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்தார். இது விடுதலைப் புலிகளின் இணைய தளத்திலும் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பு சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.

இது குறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.

இலங்கை, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

பார்வையிழந்த மாணவன்.

சண்முகராஜ்

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால், மாணவர் ஒருவர் இரு கண்களிலும் பார்வையை இழந்துள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா, பூவாணி ஊராட்சி கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவரது மனைவி பொன்ராக்கு. இருவரும் கூலித் தொழிலாளர்கள். இவர்களுக்கு இரு மகன்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இதில் ஒரு மகன் சண்முகராஜ் (13).

இவர் கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். 10.10.2006-ம் தேதி பள்ளி முடிந்து வந்த சண்முகராஜுக்கு காய்ச்சல். இதையடுத்து, மாலை ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் புறநோயாளியாக சிகிச்சை பெற்றுத் திரும்பியுள்ளார்.

மறுநாளும் காய்ச்சல் விடாததால், மீண்டும் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு உள்நோயாளியாக பொது வார்டில் சண்முகராஜை அனுமதித்துள்ளனர். சிகிச்சை அளித்தும் காய்ச்சல் விடவில்லை.

இதையடுத்து, சண்முகராஜை கவனித்த டாக்டர், 12-ம் தேதி அங்குள்ள குழந்தைகள் நல மருத்துவரிடம் விவரத்தைக் கூற, அவர் ஓர் ஊசி போட்டுள்ளார்.

ஊசி போட்ட சில நிமிடங்களில் சண்முகராஜுக்கு காய்ச்சல் விட்டுவிட்டது. ஆனால், இரு கண் பார்வையும் மெல்ல மெல்ல மங்கத் தொடங்கியது. இதை அறிந்த குழந்தைகள் நல டாக்டர் 13-ம் தேதி அதிகாலையில் மருத்துவமனைக்கு வந்து, மதுரை அரசு மருத்துவமனைக்கு சண்முகராஜை கொண்டு செல்லக் கூறி, அவசர அவசரமாக டிஸ்சார்ஜ் செய்துள்ளார்.

உடனடியாக சண்முகராஜை மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு 11 நாள்கள் உள்நோயாளியாக இருந்துள்ளார். இறுதியில் எங்களால் முடியவில்லை. வீட்டில் வைத்துக் கவனியுங்கள் எனக் கூறி, டிஸ்சார்ஜ் செய்துள்ளனர். அதற்குள் தனது கண்பார்வையை முற்றிலுமாக இழந்து விட்டிருந்தார் சண்முகராஜ்.

பின்னர் மதுரையில் உள்ள தனியார் கண் மருத்துவமனையில் கவனித்துள்ளனர். அவர்கள் மதுரையில் உள்ள ஒரு பிரபல நரம்பியல் மருத்துவரின் ஆலோசனையின்பேரில், சிகிச்சை அளித்துள்ளனர்.

இதனிடையே, மாவட்ட ஆட்சியர் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு முனியாண்டி தனது மகனின் நிலை குறித்து மனு அனுப்பினார்.

அவர்கள் சென்னை மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு பொது மருத்துவமனை டீனுக்கு, சண்முகராஜை கவனிக்கச் சொல்லி கடிதம் அளித்துள்ளனர்.

சென்னை மருத்துவமனையில் சில நாள்கள் சிகிச்சை எடுத்துள்ளார் சண்முகராஜ். அவர்களும் முடியவில்லை என கை விரித்துவிட்டனர்.

பின்னர் டீனை முனியாண்டி நேரில் சந்தித்து நிலைமையைக் கூறியுள்ளார். அவர், நீங்கள் தமிழ்நாட்டிலேயே சிறந்த நரம்பியல் நிபுணரிடம் காட்டியுள்ளீர்கள் என்று கூறி, சண்முகராஜை டிஸ்சார்ஜ் செய்து அனுப்பியுள்ளார்.

இதற்கிடையே தனது கூரை வீட்டை விட்டுவிட்டு, மகனுடன் மாதக்கணக்கில் மதுரை, சென்னை என்று அலைந்துள்ளனர். இதனால், வீடு மழைக்கு இடிந்து தரைமட்டமானது.

சண்முகராஜ் படித்துவரும் கிருஷ்ணன்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் தங்களால் இயன்ற நிதி உதவி அளித்துள்ளனர். இதுவரை சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளனர்.

மதுரை தனியார் நரம்பியல் மருத்துவரிடம் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே, தனது மகனின் நிலையை அறிந்து இழப்பீடு பெற்று சிகிச்சை பெறலாம் என நினைத்து விருதுநகர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தை முனியாண்டி அணுகியுள்ளார்.

அவர்கள், நீங்கள் பணம் கொடுத்து சிகிச்சை பெற்றிருந்தால் தான் மனுத் தாக்கல் செய்ய முடியும் எனக் கூறிவிட்டனராம்.

தற்போது முனியாண்டி, அரசு மருத்துவர்களின் குறைபாட்டால் பார்வை இழந்த தனது மகனின் சிகிச்சைக்கு அரசு உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

எம்.எல்.ஏ. கோரிக்கை: ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டப் பேரவை உறுப்பினர் தி. ராமசாமி, முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில், அரசு மருத்துவர்கள் போட்ட ஊசியால் பார்வை இழந்த மாணவருக்கு சிகிச்சை அளக்க பெருமளவு செலவு செய்ய வேண்டியுள்ளது. மிகவும் ஏழையான முனியாண்டியால் தனது மகனைக் காப்பாற்ற முடியாத நிலை உள்ளது. எனவே, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து நிதி உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு மாணவரின் வாழ்க்கை இருள் சூழ்ந்திருக்கிறது. ஒரு குடும்பத்தின் கனவு சுக்கு நூறாக நொறுங்கிவிட்டிருக்கிறது. பொறுப்பில்லாத மருத்துவர்கள், உதவிக்கரம் நீட்டாத நுகர்வோர் குறைதீர் மன்றம், ஆதரவு தரத் தயங்கும் அதிகாரிகள். பாவம் சண்முகராஜ்.

நன்றி: தினமணி

உதவிகள், செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »