போராளி கம்சனோ கருணா நினைத்தது போல் கொலை செய்யபட்டுவிட்டார். கருணாவுக்கு அத்திட்டத்தில் வெற்றி. கம்சனின் கொலையை இயற்கைச் சாவாக புலிகள் அமைப்புக்கு தெரியப்படுத்தியதிலும் கருணாவுக்கு வெற்றியே.போராளி கம்சனின் சாவும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்ட போராளிகளுக்கான போர்ப் பயிற்சி நடந்த காலமும் ஒன்றே. சிறீலங்கா அரசுடன் மீண்டும் 4ம் கட்ட ஈழப்போர் தொடங்கும் அரசியல் சூழலாக இருந்த காலமும் அதுவே. இதற்காக கிழக்கு மாகாண போராளிகள் அனைவருக்கும் விசேட போர்ப் பயிற்சிகள் வழங்குவதற்காக தளபதிகள்,பொறுப்பாளர்,போராளிகள், முகாம்களில் தங்கியிருந்து வெளியே செல்லாது பயிற்சிகளில் ஈடுபட்ட காலம். இத்தக் காலத்தையே கருணா தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்.போராளி கம்சனின் சாவை இயற்கைச் சாவாக மருத்துவப் போராளி ஊடாக ஏனைய போராளிகள் மத்தியில் பரப்புரை செய்தார்(பரப்பினார்). விடுதலைப் புலிகளின் தலைமைச் செயலகத்திற்கும் கம்சனின் சாவு இயற்கைச் சாவாக அறிவிக்கப்படுகிறது. இதிலும் கருணா கணிசமான வெற்றியை தனது பக்கம் சேர்த்துக் கொண்டார்.
கம்சனின் இறுதி வீரவணகத்திற்காக கிழக்கு மாகாண தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் அனைவருமாக மாவீரர் துயிலுமில்லத்தில் காத்திருந்தார்கள். கருணாவோ இறுதி வீரவணக்திற்காக துயிலுமில்லம் வருகை தருகிறார். துயிலுமில்லம் வந்த கருணா அங்கே தனிமையைத் தேடுகிறார். ஏனைய பொறுப்பாளர்கள், தளபதிகள், போராளிகளுடன் சுமூகமாகப் பழகும் கருணா அன்று எதனையோ இழந்து பறிகொடுத்தது போல் காணப்பட்டார்.
தளபதிகள், பொறுப்பாளர்கள், மற்றும் போராளிகளுடன் கதைக்காமல், ஓராமாக நின்று, தனிமையில் இருந்து, அழுதவண்ணம் இருந்தார். என்னடா…? கிழக்கு மாகாணத்தில் எத்தனையோ போராளிகள் இந்த தேச விடுதலைக்காக தங்கள் இன்னுயிர்களை அர்ப்பணித்த போதும் அப்போராளிகளுக்காக ஒரு சொட்டு் கண்ணீர் கூட வடிக்காத கருணா கம்சனின் சாவுக்கு கண்ணீர் வடிக்கிறாரே என அவருடன் நீண்ட காலமாக இருந்து வாழ்ந்த மூத்த போராளிகள் மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாது கருணாவின் சதி முயற்சியை விடுதலைப் போராளிகளால் உணரக்கூடிய திருப்புமுனைச் சம்பவமாக அது அமைந்தது.
இதற்கு இடையில் வன்னி சென்று தேசியத் தலைவருக்கு கருணாவின் 35 இலட்சம் இலங்கை ரூபா நிதி மோசடி செய்த விடயத்தை தெரியப்படுத்திவிட்டு மேலதிக தகவல்களை திரட்டி உறுதிப்படுத்த மட்டக்களப்பு மாவட்டம் திரும்பினார் மட்டக்களப்பு நிதிப் பொறுப்பாளர்.
மட்டக்களப்பு சென்ற நிதிப் பொறுபாளருக்கு கம்சனின் சாவும் கருணா மீது இருந்து சந்தேகத்தை மேலும் வலுப்படுத்தியது.
இதனை அடுத்து தமிழீழ தேசியத் தலைவரால் கருணாவுக்கு செல் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது….. (அம்பலம் தொடரும்)