யுஎஸ் தாக்குதலில் மூன்று குழந்தைகள் பலி!

ஈராக்கிலுள்ள அன்பார் மாகாணத்தில் அமெரிக்க படையினரை கொலை செய்வதற்காக சாலையோரம் குண்டுவைக்க முயன்ற மூன்று பேர் மீது அமெரிக்கப் படையினர் நடத்திய தாக்குதலில் 3 குழந்தைகள் இறந்தனர்.

ஈராக்கின் தலைநகரான பாக்தாதில் இருந்து மேற்கே 65 கி.மீ. தொலைவில் உள்ள அன்பார் மாகாணத்திலுள்ள ஃபலூஜா என்ற இடத்தில் முக்கிய நெடுஞ்சாலையில் வெடிமருந்தை வைக்க முயன்ற 3 பேரை குறிவைத்து அமெரிக்க ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 வயது முதல் 11 வயது வரையிலான 3 குழந்தைகள் உயிரிழந்ததாக அமெரிக்க ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் அமெரிக்கப்படையினரின் தாக்குதலில் அவர்கள் துப்பாக்கி குண்டினால் கொல்லப்பட்டார்களா அல்லது அதையடுத்து நடந்த வெடிமருந்து வெடித்ததில் உயிரிழந்தார்களா என்பது உறுதியாக தெரியவரவில்லை என்றும் ராணுவ அலுவலகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் பற்றி உயர் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ஈரான் மீது யுஎஸ் போர் தொடுக்காது – ரைஸ்.

ஈரான் மீது போர் தொடுப்பதற்கு அமெரிக்கா தயாராக இல்லை என்று அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கண்டலினா ரைஸ் கூறியுள்ளார்.

மேட்ரிட் நகரில் ஸ்பெயின் வெளியுறவு அமைச்சர் மிகில் மாரடினோஸ்சை சந்தித்து பேசிய பின்னர் பத்திரிக்கையாளர்களுடன் பேசும் பொழுது ரைஸ் இவ்வாறு தெரிவித்தார்.

ஈரானின் அணு தொடர்பான செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் பொழுது, “ஈரான் பிரச்சனையில் தங்களது கொள்கை என்ன என்பதை அதிபர் புஷ் தெ ளிவுபடுத்தியுள்ளதாகவும், அந்தக் கொள்கைக்கு அமைச்சரவை உறுப்பினர்கள் மற்றும் துணை அதிபர் ஆகியோர் ஆதரவு தெரிவித்து இருப்பதாகவும்” கூறினார்.

இதற்கு முன்னர் ஐநாவின் அணு கண்காணிப்பு அமைப்பின் தலைவர் முகம்மது எல்பராடி, ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்தப் பிரச்சனைக்கு தூதரக ரீதியில் தீர்வு காணும் வாய்ப்பு இருப்பதாகவும் ரைஸ் கூறினார்.

ஈரான் மீது ஏற்கெனவே ஐநா பாதுகாப்பு கவுன்சில் இரண்டு பொருளாதார தடைகளை விதித்துள்ளது. 3வது தடை விதிக்க அமெரிக்கா வலியுறுத்தி வருவது கவனிக்கத்தக்கதாகும்.

உலகம், செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

“திமுக அரசின் கதை முடியப்போகிறது” – ஜெ.ஜெயலலிதா!

அதிமுக கழக தொண்டர் ஒருவரின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டு செல்வி ஜெ.ஜெயலலிதா பேசும் பொழுது தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக அரசின் கதை விரைவில் முடியப்போகிறது என்று கூறினார்.

சென்னையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையில் நடந்த கழக தொண்டரின் மகள் திருமணவிழாவில் கலந்து கொண்டு அவர் பேசும் பொழுது முதல்வருக்கு எதிராக கடுமையான வாசகத்தை பிரயோகித்து சாடவும் செய்தார்.

அவர் அங்கு பேசும் பொழுது, “நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், தான் வாழ வேண்டும், தன்னைச் சார்ந்தவர்களும் வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். அவர்கள் சமுதாயத்துக்கும் பயனுள்ளவர்களாக இருப்பார்கள்.

திருமண விழாக்களில் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும். மங்களகரமாகப் பேச வேண்டும். ஆனால் இன்று சூழ்நிலை வேறுவிதமாக உள்ளது. எம்ஜிஆர் 1972ல் நிறுவிய அதிமுக தலைமை அலுவலக கட்டடத்தையே இடிக்க அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதன்மூலம் இந்த அரசின் கதை முடியப்போகிறது. இந்த மகிழ்ச்சியான நேரத்தில் அதுபற்றி அதிகம் பேச விரும்பவில்லை.

இவ்வாறு செல்வி ஜெ. ஜெயலலிதா பேசினார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

வார விடுமுறை நாள் மாற்றம்!

குவைத் நாட்டில் அதிகாரப்பூர்வ வார விடுமுறை நாள் வரும் செப்டம்பர் மாதம் முதல் மாறுகிறது. இதுவரை வார விடுமுறை நாளாக ‘வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை’ நாட்களாக இருந்து வந்தது. இது ‘வெள்ளி மற்றும் சனிக்கிழமை’ ஆக மாற்றப்படுவதாக குவைத் அரசு அறிவித்துள்ளது.
அராபிய மற்றும் வளை குடா நாடுகளில் வார விடு முறை நாளாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்களின் விருப்பத்திற்கேற்ப இந்த மாற்றம் நடைமுறைக்கு வருகிறது என அமைச்சரவை விவகாரங்களை கவனிக்கும் குவைத் துணை பிரதமர் ஃபைசல் அல்ஹாஜி தெரிவித்துள்ளார்.
வார விடுமுறை நாளை அண்டை நாடுகளுடன் இணைப்பதால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படும். குவைத்தின் வளர்ச்சிக்கும் உதவும் என்றார் அவர்.

வளைகுடா நாடுகள் தங்களுக்கிடையில் பரஸ்பர நல்லிணக்கத்துடன் செல்ல இதுபோன்று பல வி்ஷயங்களில் ஒன்று போல் இருக்க முனைவது கவனிக்கத்தக்கதாகும்.

செய்திகள், வளைகுடா இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

உலக நிகழ்வுகள் குறித்து!

உலக முக்கிய நிகழ்வுகளை ஓரிடத்தில் தொகுக்க பல நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தன் வெளிப்பாடே இந்த “உலக நிகழ்வுகள்” வலைப்பூ.

தொடர்ந்து உலகின் முக்கிய நிகழ்வுகளை – நிகழ்ந்தவை மற்றும் நிகழ்ந்துக் கொண்டிருப்பவைகளை –  இவ்வலைப்பூவில் காணலாம்.

அழகேசன்.

தகவல் இல் பதிவிடப்பட்டது . 1 Comment »