தலைவரின் கட்டளையை ஏற்க மறுத்த கருணா வன்னி சென்றால் தனது உயிருக்கு ஆபத்து நேரும் என்பதை நன்கு அறிந்திருந்தார். இப்படியான ஒரு நெருக்கடியைச் சந்தித்த கருணா மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ராஜன் சத்தியமூர்த்தியுடன் பிரச்சினை குறித்து ஆலோசிக்கின்றார். ராஜன் சத்தியமூர்த்தியோ, “உனது கறையை நீக்க பிரதேசவாதத்தை கிழப்பு(எழுப்பு). அதன்மூலம் முரண்பாட்டைத் தோற்றுவிப்பதே சரியான தீர்வு” என வலியுறுத்துகிறார். பிரதேச வாதத்தை முன்வைத்து கருணா விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து விலகிச் செல்வதாக ஊடகங்களுக்கு அறிவிக்கின்றார். கிழக்கு மாகாண போராளிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், கடும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததினால் கருணாவின் துரோகச் செயலை உடனே அறிந்து கொள்ள வாய்ப்பே இருக்கவில்லை.
போராளிகள் போர்ப் பயிற்சியில் ஈடுபட்டிருந்த சமயத்தைப் பாவித்து போர் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போராளிகள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் வானொலி என்பன கருணாவினால் வாங்கப்பட்டன. போராளிகளுக்கு வெளித் தொடர்பு இருக்கவில்லை; வெளியுலகமும் தெரியவில்லை.
எல்லோரும் பயிற்சியில் முக்கிய கவனம் செலுத்தியிருந்தனர். பயிற்சி முகாமுக்கு திடீரென வருகை தந்த கருணா போராளிகளை கலந்துரையாடலுக்காக அழைக்கின்றார். “தேசியத் தலைவர் நேரடியாக தென்தமிழீழத்தை வழிநடத்துவதாகவும், எம்மை விடுதலைப் புலிகளின் ஏனைய கட்டமைப்புக்களுக்கு ஊடாக செயற்படாமல் தனது நேரடி் கண்காணிப்பில் செயற்படுமாறு தலைவர் பணித்துள்ளார்” என போராளிகள் மற்றும் பொறுப்பாளர்களுக்கு கருணா தெரியப்படுத்துகிறார்.
போராளிகளோ கருணாவின் கூற்றை சந்தேகத்துடன் நோக்குகின்றனர். கருணாவின் விசுவாசிகளாக இருந்து வந்த போராளிகளுக்கு மட்டுமே கருணாவின் பிரிவினை தெரிந்திருந்தது. போராளிகள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்ற வேளை கருணா தன்னை மிக விரைவாக பலப்படுத்துகின்றார்.
அமைப்பிலிருந்து கலைக்கப்பட்டவர்களுக்கும் தேசத்துரோகத்தில் கைதிகளாக அடைக்கப்பட்டவர்களுக்கும் மீள்வாழ்வு தருவதாகவும், தன்னுடன் சேர்ந்து இயங்குமாறும் கருணாவால் ஆசைகாட்டி எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. மரணத்தை ஏற்க மறுத்த இவர்கள் கருணாவுடன் இணைகின்றனர். அதுமாத்திரமல்ல ஜெயசிக்குறு சண்டையில் களத்தில் பணி ஆற்றிய தளபதிகள் சிலர் கருணாவின் சதிவலையில் அகப்படுகின்றனர்.
இவர்கள் அனைவரது பலத்தை நம்பி கருணா விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். பிரதேசவாத கருத்துக்களை முன்வைத்தார். தமீழத்திலும் உலகப்பரப்பிலும் கருணாவின் அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியது. ஊடகங்கள் கை ஒன்று கால் ஒன்றாக உருப்பெருக்கி தமது கருத்துக்களை வெளிப்படுத்தின.
புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் இது உண்மையா? நம்புவதா? வேண்டாமா? என்ற பல்வேறு கேள்விக் கணையுடன் எல்லோருமே குழம்பிப் போயினர். கிழக்கு மாகாண மக்களும் எதை செய்வது என்ன செய்வது என்பது தெரியாமல் திசைமாறியபடியே குழம்பினர். இதற்கு் விதிவிலக்காக கிழக்கு மாகாண போராளிகள் மத்தியில் கருணாவின் அறிவிப்பு தெரியவரவில்லை. போராளிகள் பயிற்சியில் கூடிய கவனம் செலுத்தினர்.
வானொலிகளோ, தொலைபேசிகளோ, தொலைத் தொடர்பு சாதனங்களோ, மக்கள் தொடர்புகளோ, ஊடக தொடர்பு சாதனங்களோ எதுவுவே இல்லாத நிலையில் கருணாவின் துரோகத்தனத்தை போராளிகளோ பொறுப்பாளர்களோ அறிய வாய்ப்பே இருக்கவில்லை.
ஒரு சில நாட்களில் தளபதிகள், பொறுப்பாளர்கள் மத்தியில் கருணாவின் பிரிவினை பற்றிய கருத்து தெரியவருகிறது. பொறுப்பாளர்களும் தளபதிகளும் என்ன செய்வதென்று அறியாமல் தடுமாறிய நிலையில் இருக்கின்றனர்.
(தொடரும்)
மறுமொழியொன்றை இடுங்கள்