வருங்கால முதல்வரே வருக!

யாரப்பா அந்த புதிய வரவு என்று கலங்க வேண்டாம். எல்லாம் நம்ம நாட்டாமை அய்யாதான். நாட்டாமை அண்ணாச்சி என்ன சொல்றாருன்னு பார்ப்போமா?:

“விரைவில் நான் தொடங்க உள்ள புதிய கட்சியின் கொள்கைகளை வகுக்க ஓய்வு பெற்ற 30 ஐஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுவை அமைத்துள்ளேன்.

நாட்டின் பொருளாதாரம், தொழில், கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்காக தொலைநோக்குடன் கூடிய கொள்கைகள் வகுக்கப்படும்.

எனினும், மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே கட்சியின் முதலாவது கொள்கையாக இருக்கும்.

எனக்கோ அல்லது எனது சகாக்களுக்கோ தமிழகத்தின் முதல்வராக ஆசை இல்லை. ஆனால், நீங்களும் (மக்களும்) முதல்வராக வரலாம் என்று உணரச் செய்ய பாடுபடுவேன்.

தேர்தலின்போது சராசரியாக 55 சதவீதம் பேர் மட்டுமே வாக்களிக்கின்றனர். இதில் 28 சதவீதம் வாக்குகளை பெறுபவர்களே ஆட்சிப் பொறுப்புக்கு வருகின்றனர்.

எனவே, மீதியுள்ள வாக்காளர்களையும் வாக்களிக்கச் செய்வதன் மூலம் உண்மையான ஜனநாயகத்தை மலரச் செய்ய முடியும்.

காங்கிரஸ், திமுக, அதிமுக உள்ளிட்ட எந்தக் கட்சியை மக்கள் விரும்புகிறார்களோ அந்தக் கட்சிக்கு தங்களது வாக்குரிமையை முழுமையாக பயன்படுத்துவது அவசியம்.

அரசியல் தலைவர்கள் தற்போது கொச்சையாக விமர்சனம் செய்கின்றனர். யார் குடிகாரர் என்று தினமும் வாக்குவாதம் நடப்பது வேதனை அளிக்கிறது.

இளைஞர்கள் நல்லொழுக்கத்தை பின்பற்றினால் பல ஆண்டுகள் இளமையுடன் வாழலாம். எம்.ஜி.ஆர். தனது 65 வயதில் கூட துள்ளிக் குதித்து ஓடியதை நான் பார்த்து வியந்துள்ளேன்.

25 ஆண்டுகள் திரைப்படத் துறையில் தொடர்புள்ள நான் அரசியலுக்கு வர எம்ஜிஆர் தான் காரணம். எம்.ஜி.ஆர். தான் எனக்கு முன்மாதிரி.

“நாட்டாமை” போல யாருக்கும் பஞ்சாயத்து செய்ய மாணவர்கள் நினைக்க வேண்டாம்.

மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். அதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளேன். ஆனால், ஒரு நாள் முதல்வராக இருந்து ஒன்றும் சாதிக்க முடியாது.

2 கட்சிகள் உள்ள ஜனநாயக முறை நமக்குப் பொருந்துமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.”

நம்ம அண்ணாச்சியின் அறிக்கையினைகண்டு புல்லரித்துப் போய் இருப்பவர்களுக்கு -பொறுங்கள். ஏழரை அண்ணாச்சிக்கா அல்லது தமிழக அப்பாவிஜனங்களுக்கா என்பதை பொறுத்தி்ருந்து பார்ப்போம்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . 3 Comments »

கலைஞர் கருணாநிதியும் நானும்.

கலைஞர் : பிறந்த நாள் விழா கொண்டாடப்படுவது மகிழ்விப்பதற்காக அல்ல.

நான் : அப்படியா? வேறு எதற்காகவாம்?

கலைஞர் : ஒருவர் கொண்ட கொள்கையை பின்பற்றி நடப்பதற்காகவும் தான்.

நான் : அட இது தெரியாமல் போயிற்றே. இது நமது புது தத்துவமா?

கலைஞர் : நாம் ஏற்கனவே உள்ள தத்துவத்தை முடித்து விட்டு தான் புதிய தத்துவத்திற்குள் நுழைய வேண்டும்.

நான் : அப்படியெனில் புதிய தத்துவம் எப்பொழுது கிடைக்கும்?

கலைஞர் : ஏற்கனவே, உள்ள தத்துவத்தை நிறைவேற்றும் பணிகளை முடியுங்கள். புதிய தத்துவத்தை தருகிறோம்.

நான் : ஏற்கனவே, உள்ள தத்துவத்தை நிறைவேற்ற நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

கலைஞர் : ஏற்கனவே, உள்ள தத்துவத்தை நிறைவேற்ற, மக்களிடத்தில் நம் கொள்கைகளை இன்னும் ஆழமாக கொண்டு செல்ல வேண்டும்.

நான் : சரி. அப்படியே செய்கிறோம். ஆனால் ஒரு சந்தேகம். நமக்கென அப்படி ஏதாவது தனியாக கொள்கைகள் இருக்கின்றதா என்ன? ஒரு உதாரணம் கூறுங்களேன்.

கலைஞர் : தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு உருவாக்கிட பாடுபட்டோம்.

நான் : அப்படியா? ஆச்சரியமாக உள்ளது! இந்த வெட்டிவேலையை நாம் எப்பொழுது செய்தோம்?

கலைஞர் : நீதிக்கட்சியாக இருந்த போதும் அதுமாறி பின்னர் திராவிடக் கட்சியாக உருவாகிய போதும் இக்கொள்கைகளை பரவலாக்கி இன்னும் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்.

நான் : (மனதினுள் – அது தான் மத்தியிலும் மாநிலத்திலும் குடும்பத்தினர்களை நுழைக்க அல்லும்பகலும் பாடுபட்டு கொண்டிருப்பது தெரிகிறதே!) ஓ! ஆமாம், ஆமாம். மறந்தே போய் விட்டது!

கலைஞர் : பிறந்தநாள் செய்தியாக நான் மத்திய அரசின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக தமிழ் வரவேண்டும் என்று கூறியுள்ளேன்.

நான் : பேஷ் பேஷ். ஆஹா! அப்படித்தான் பிரம்மாதம். மத்திய அரசை கதிகலங்க அடித்து விட்டீர்கள் தலைவா!(மனதினுள் – ஆமாம், இப்படியே காலத்தை ஓட்டி விடும். பின்னர் இளைய வாரிசு முன்னெடுத்து செல்லும். அப்படியே இன்னும் ஒரு 100 வருடம் ஓட்டி விடலாம். அடுத்த ஒரு 100 வருடத்திற்கு தமிழன்களை முன்னேற விடுவதாக உத்தேசமே இல்லை போலிருக்கிறது. விளங்கியது போல் தான்.)

கலைஞர் : மேலும், இந்திய நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

நான் : அது நடக்குமா தலைவா?கங்கைகாவிரியில் இணையும் முன் இணைக்க கூறுபவர்கள் இந்தியாவை விற்று விடுவார்களே!( மனதினுள் – ஓ! அவசரப்பட்டு வார்த்தையை விட்டு விட்டேனே. கடவுளே நான் கூறியதை இவர் புரிந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமே!)

கலைஞர் : கங்கையையும் காவிரியையும் இணைப்பது என்பது கடினம் தான். முதலில் தீபகற்ப நதிகளையாவது ஒன்றிணைக்க வேண்டும். கோதாவரி கங்கை, கோதாவரி காவிரி நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

நான் : (மனதினுள் – அப்படி போடு.நம்மிடமே இப்படி இரட்டைநாக்குடன்பேசுபவர்மக்களிடம் எப்படியெல்லாம் பேசுவார்! யப்பாஆ ஜகஜால கில்லாடி தான் டோய். எப்படியோ நான் சொன்னதை புரிந்து கொள்ளவில்லை. தப்பித்தேன்.) தலைவா, அதுகூட நடக்குமா?(இதுக்காவது ஒழுங்கா ஏதாவது ஐடியா வைத்திருப்பாரா?)

கலைஞர் : மாநிலங்களுக்கு இடையில் உள்ள நதிகளை ஒன்றிணைக்க வேண்டும்.

நான் : (என்ன இது? இப்படி ப்ளேட்டை மாத்தி போடுறார்?) தலையை சொறிந்து கொண்டே… தலைவா, இதாவது நடக்குமா?

கலைஞர் : தென்னக நதிகளையாவது இணைக்க வேண்டும்.

நான் : (யப்போய். தல சுத்துதே!)

கலைஞர் : (என் நிலையை கண்டு கொள்ளாமல் தொடர்கிறார்) இதற்காக மாநாடுகளை போட்டு அதில், மாநில நீர்பாசனத் துறை அமைச்சர்கள் மற்றும் முதல்வர்களை மற்றும் பிரதமரை அழைத்து ஒப்பந்தம் ஏற்படுத்த வேண்டும்.

நான் : (யார் அழைப்பதாம். நடக்காது என்பதை சூசகமாக தெரிவிக்கிறாரோ?) இவ்வளவு கஷ்டப்பட்டு இதெல்லாம் எதற்காக தலைவா?

கலைஞர் : அப்போதுதான் நாட்டின் வளம் பெருகும்.

நான் : (ஆகா! நாட்டின் வளத்தை விட குடும்ப வளத்தை பெருக்குவது தான் தன் உத்தேசம் என்பதை எவ்வளவு தெளிவாக கூறுகிறார்.)

கலைஞர் : எல்லா மாநிலங்களும் பயன் பெறும். அதற்கு ஆவண செய்ய வேண்டும்.

நான் : (யார்? பிரதமரையும் அழைத்து ஒப்பந்தம் போட இவர் யாரிடம் தான் கோரிக்கை வைக்கிறார்? ஒரு மண்ணும் புரியலப்பா.) சூப்பர் தலைவா. நம்மோட பழைய கொள்கைகள்ல மேலும் ஒண்ணு கூட சொல்லுங்களேன்.

கலைஞர் : கொள்கைஅளவில் ஆந்திரா, வங்காளம் மற்றும் தமிழக அரசுகள் மதச்சார்பற்ற அரசுகளாக இருக்க வேண்டும்.

நான் : அது என்ன இந்த மூன்று மாநிலத்தை மட்டும் குறிப்பிட்டு கூறுகின்றீர்கள்? அப்படீன்னா மற்ற மாநிலங்களும், மத்தியிலும் மதசார்புள்ள அரசு அமையலாமா?

கலைஞர் : மத்தியிலும் மாநிலங்களிலும் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும்.

நான் : (வயசாயிட்டாலே இப்படித்தானோ? மனுசன் இப்படி நிமிட நேரத்துல நிறம் மாறுராரே!) அருமை தலைவா!

கலைஞர் : நாம் தான் மதச்சார்பற்ற அரசிற்கு அடிக்கல் நாட்டினோம்.

நான் : (நாட்டல, புடுங்கினீங்க. அண்ணாவின் பகுத்தறிவு பாசறைன்னு அடிக்கடி குரல் குடுத்துட்டு மனுசன் இப்படி கேப்புல மஞ்சத்துண்டு, அடிக்கலுன்னு பினாத்துறாரு. மஞ்சத்துண்டு, அடிக்கல் எல்லாம் மதசார்பின்மையின் அடையாளமோ?) ஆமாம் தலைவா!

கலைஞர் : நம்மால் வளர்க்கப்பட்ட இயக்கம் பெற்றுள்ள வலிமையான இளைஞர் பட்டாளத்தை கொள்கைகளை ஏற்றுக்கொள்ள அடித்தளத்தை ஏற்படுத்த வேண்டும்.

நான் : (அப்பாடா. முதன்முதலா ஒரு உண்மையை போட்டு ஒடச்சிட்டார். ஆமா, கொள்கைன்னா என்னன்னே தெரியாம இருக்குற உடன்பிறப்புகளுக்கு இடையில், இப்படி நிமிட நேரத்தில் மாற்றி மாற்றி பேசிக் கொண்டிருந்தால் எந்த உடன்பிறப்பு தான் கொள்கையை பற்றி கவலைப்படும்?) நம் இளைஞர் பட்டாளம் ஒரு சுத்தமான கொள்கை பட்டாளம் தலைவா. இது கொள்கைக்காகவே ஒன்று கூடிய பட்டாளம் தலைவா! நீங்க சொன்னா எல்லாம் சரியாத்தான் இருக்கும் தலைவா!

கலைஞர்: பழைய தத்துவத்திற்கு புதிய பலத்தை தரவேண்டும்.

நான் : (புரியலியே. ஒருவேளை கம்பு, தடி, அரிவாள்களை விட்டுவிட்டு துப்பாக்கி, குண்டு போன்றவற்றை கையில் எடுக்க வேண்டும் என்கிறாரோ?) கண்டிப்பாக தலைவா! நீங்கள் சொல்லுங்கள். நாங்கள் செய்கின்றோம்.

கலைஞர் : வாய்மை, தூய்மை இரண்டையும் முக்கிய கொள்கையாக நீங்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

நான் : (ஆமா, கொள்கைகளை கடைபிடிக்க கூறும் பொழுது “நாம்” என அனைத்திற்கும் கூறிவிட்டு, இந்த இடத்தில் மட்டும் கவனமாக “நீங்கள்” என குறிப்பிடுகிறார். பழம் தின்னு கொட்டைப் போட்டவர் என்பது எவ்வளவு சரியானது!) அப்படியே ஆகட்டும் தலைவா!

கலைஞர் : அரசியலில் நாம் ஆற்றும் பணிகளை மற்றும் ஓராண்டு சாதனைகளை மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும்.

நான் : (கனிமொழியை டெல்லிக்கு அனுப்பியது, மதுரைக்கு தெற்கே அழகிரிக்கும் வடக்கே ஸ்டாலினுக்கும் எழுதிக் கொடுத்துள்ளது, கள்ள ரயில் ஏறி சென்னை வந்தவர் இன்று ஆசியாவிலேயே இரண்டாவது பணக்காரராக ஆனது எப்படி என்பது போன்றவற்றையும் மக்களிடம் எடுத்துக் கூறவா?)இலவச டிவி, அரிசி, வேட்டி, சேலை எல்லாத்தையும் நிச்சயமா எடுத்துச் சொல்றோம் தலைவா.

கலைஞர் : இந்தியாவை வலிமைப்படுத்தும் திட்டமாக சேது சமுத்திர திட்டம் உள்ளது. இந்த திட்டத்தை தடுக்க மதவாத சக்திகள் முயற்சி செய்து வருகின்றன.

நான் : (மதவாத்தின் வரையறை என்ன? குல்லாய் போட்டவர்களின் நண்பன், மஞ்சள் துண்டு, அடிக்கல் இதெல்லாம் மதசார்பின் அடையாளங்கள் இல்லையா?) ஆமாம் தலைவா!

கலைஞர் : ராமர் கோவிலுக்காக பாபர் மசூதியை இடித்தவர்கள், இன்று சேது சமுத்திர திட்டத்தை எதிர்க்கின்றனர்.

நான் : (ஸ்டாலினுக்காக அழகிரியையும், கனிமொழிக்காக தயாநிதியையும், குடும்பத்திற்காக கட்சியையும், ஆட்சிக்காக கொள்கையையும் இடித்து தரைமட்டம் ஆக்கியதை விடவா?) அவர்களுக்கு எதிராக போராடுவோம் தலைவா.

கலைஞர் : இத்திட்டம் நிறுத்தப்படடால் இந்தியாவின் வடபகுதி வாழும்.தென்பகுதி தேயும் நிலை ஏற்படும்.

நான் : (ஓ சங்கதி அப்படிப்போகுதா? சரி அப்படியாவது சிங்கிள் டீக்கு லாட்டரி அடித்து, கள்ள ரயில் ஏறி சென்னை ப்ளாட்பாரத்தில் அலைந்து திரிந்த ஆசியாவின் இரண்டாவது பணக்காரர் தேய்கிறாரான்னு பாக்கலாமே) ஆம். இது தமிழையும் தமிழ்நாட்டை அழிக்க வடமொழியினர் செய்யும் சதி தான் தலைவா.

கலைஞர் : திட்டம் நிறைவேற்றப்பட்டால் தென்பகுதி மிகச் சிறந்த வளர்ச்சி நிலைக்கு மாறும்.

நான் : (அது மாறுகிறதோ என்னமோ, ஆசியாவின் டாப் 10 ல் முதலிடத்திற்கு இவர் மாறிவிடுவார்.) அதன்மூலம் தமிழை உலகெங்கும் பரப்பலாம்.

கலைஞர் : பல நன்மைகளை பெறும்.

நான் : (யார்? புரியுது) எனவே தமிழ் வாழ்க!

கலைஞர் : இத்திட்டத்தை எதிர்க்கும் மதவாத சக்திகளுக்கு பாடம் புகட்ட வேண்டும்.

நான் : எனவே எல்லோரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள். (ஆமா வேற என்ன சொல்லப்போறார்? தேவையெனில் அவர்கள் திருந்திவிட்டதாக கூறி கூட்டு வைக்கவும் தயங்கமாட்டாரே. நோக்கம் நாற்காலி மட்டும் தானே. ம் வாழுங்கள். ஆசியா டாப் 10 ஆக வாழ்த்துக்கள்)

கலைஞர் : மத்தியில் மதச்சார்பற்ற அரசு அமைய வேண்டும்.

நான் : (போட்டாரு பாரு போடு. இதுதான் ஹைலைட். எவ்வளவுதெளிவா இப்ப மத்தியில் ஆட்சியில் இருக்கிற காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு மதச்சார்பற்ற அரசு இல்லை என்று வாக்குமூலம் தருகிறார். சம்மதிக்க வேண்டும் அய்யா இவரின் தைரியத்தை.) ஆம். அதற்கு நாம் தற்போது போன்று நிபந்தனையற்ற ஆதரவு அளிப்போம்.

புரியாமல் தலையை பிய்ப்பவர்களுக்கு மட்டும்.

சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »