இந்தியாவில் தேவதாசி முறை தொடர்கிறது!

இந்தியாவில் பெண்கள் மத ரீதியாக பாலியல் அடிமைகளாக வாழ நிர்ப்பந்திக்கப்படுவது இன்னமும் தொடர்கிறது என்று பிபிசி நடத்திய ஒரு புலனாய்வில் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கத்தை ஒழிப்பதற்காக சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ள போதிலும், பாரம்பரிய இந்துக் கலாச்சாரத்துடன் தொடர்புடைய இந்த வழமை இன்னமும் தொடரத்தான் செய்கிறது.

எல்லம்மா என்னும் பெண் தெய்வத்தை வழிபடும் முறைமை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு தொடருகிறது. அந்த பெண் தெய்வத்தை வழிபடுபவர்கள், தமது பெண் குழந்தைகளை அந்த தெய்வத்துக்கு சேவை செய்வதற்காக காணிக்கையாக்குகின்றனர்.

அந்தப் பெண்கள் தேவதாசிகள், அதாவது தெய்வத்தின் அடிமைகள் என்று அழைக்கப்படுவார்கள். ஆனால் தெய்வத்தின் அடிமைகளாக சித்தரிக்கப்படும் இந்த பெண்களில் பலரது வாழ்க்கை ஒட்டுமொத்தத்தில் பாலியல் அடிமைகளாகத்தான் சென்று முடிகிறது.

50 வருடங்களுக்கு முன்னர் இந்த தேவதாசி முறைமையைத் ஒழிக்கும் சட்டம் அமலுக்கு வந்திருக்கின்ற போதிலும், தேவதாசிகளாக பெண்கள் பொட்டுக்கட்டப்படுவது, பாலியல் அடிமைகளாக வாழ்க்கை தொடர்வதும் இன்னமும் தொடரத்தான் செய்கிறது. கர்நாடக மாநிலத்தில் மாத்திரம் சுமார் இருபத்தையாயிரம் தேவதாசிகள் இருப்பதாக இந்த முறைமைக்கு எதிரான செயற்பாட்டாளர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

படித்தது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . 2 Comments »

எம்.எல்.ஏக்கள் நீக்கம் – பாஜக அதிரடி.

ராஜஸ்தானில் கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதாக எம்.எல்.ஏ.க்கள் இருவரை பாரதீய ஜனதா கட்சி இடைநீக்கம் செய்தது.

இதன்படி, ‘அட்டர் சிங் பாந்தா மற்றும் பிரஹலாத் குன்ஜால் ஆகியோர் கட்சியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாகவும், ஒரு வார காலத்தில் அவர்கள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஷர்மா தெரிவித்தார்.

மேலும், அவ்வாறு விளக்கமளிக்கவில்லை என்றால், அவர்களை நீக்குவது குறித்து தலைமையிடத்தில் பரிந்துரைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

குர்ஜார் விவகாரத்தில் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேவின் மோசமான செயல்பாட்டின் காரணமாக, அடுத்தத் தேர்தலில் கோட்காவில் உள்ள இரு தொகுதிகளில் அவருக்கு எதிராக இவ்விருவரும் செயல்பட திட்டமிட்டிருந்தனர். இதனை காரணம்காட்டி அவ்விருவரும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மேலும் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு பாரதீய ஜனதா கட்சி எச்சரிக்கை விடுத்திருக்கின்றது.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மதரசாக்கள் அறிவு மையங்கள் – ராஜசேகர ரெட்டி.

ஐதராபாத்தில் மதரசாக்களுக்கு உருது அகாடமி சார்பில் கம்ப்யூட்டர் வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்ட ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி பேசியதாவது:

“முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக எழுந்துள்ள சட்டப்பூர்வமான தடைகளை எதிர்கொண்டு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் வகையில் இன்னும் 30 நாட்களில் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும். சிறுபான்மையினர் நலனில் மாநில அரசு மிகவும் அக்கறை கொண்டுள்ளது. மதரசாக்களில் நவீன கல்வி கற்றுத்தர ஏற்பாடு செய்யப்படும்.”

“மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், மாநிலத்தில் தெலுங்கு தேசமும் ஆட்சி செய்தபோது, தீவிரவாத பயிற்சி முகாம்களாக மதரசாக்கள் சித்தரிக்கப்பட்டன. ஆனால், அவை அறிவு மையங்கள் என்று காங்கிரஸ் அரசு கருதுகிறது. மதரசாக்களை நவீனப்படுத்த அரசு எல்லா உதவிகளையும் செய்யும்”. இவ்வாறு ராஜசேகர ரெட்டி பேசினார்.

இந்தியா, செய்திகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

ராமர் பாலத்தால் சுற்றுச்சூழலுக்கு கேடு – சுப்ரமணிய சுவாமி வரவேற்பு!

ராமர் பாலத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவது குறித்து உலக நினைவுச் சின்னங்கள் கண்ணாணிப்பு அமைப்பு கவலை வெளியிட்டுள்ளதற்கு ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியது:

“ராமர் பாலம் பழங்கால நினைவுச் சின்னங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்த நினைவுச் சின்னம் குறித்து ஆவணங்களை திரட்ட அமெரிக்காவில் இருந்து இயங்கி வரும் உலக நினைவுச் சின்னங்கள் கண்காணிப்பு அமைப்பு முடிவு செய்துள்ளது.

ராமர் பாலம் எவ்வளவு காலத்துக்கு முற்பட்டது என்பதை அறிய அந்த அமைப்பு, ராமர் பாலப் பகுதியில் உள்ள துகள்களை மாதிரியாக கொண்டுச் சென்று ஆய்வு நடத்த உள்ளது.

முன்னதாக இந்த அமைப்பின் தலைவர் மர்லின் பெரி இந்திய அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சர்வதேச கடல் ஆராய்ச்சி புகைப்படக்காரர்கள் உதவியுடன் இப் பாலத்தின் படம் எடுக்க அனுமதிக்க வேண்டும் என கோரியுள்ளார். மேலும், சுற்றுச்சூழலுக்கு இந்த பாலத்தால் கேடு விளையும் என்றும் மர்லின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது” என்று குறிப்பிட்டுள்ளார்.

செய்திகள், தமிழகம் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

சாமியப் பத்தி பேசு! ஆனா, இரட்டை டம்ளர் பத்திப் பேசாதே!

சாதி இழிவுகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் எதிர்க்கத் துணியும் எவருக்கும் இந்த சமூகம் அளிக்கும் ஒரே பரிசு அவமானமும், அடி உதையும் மட்டுமே. இச்சமூகத்தின் பிற கேடுகளை எதிர்க்கும் சமூகப் போராளிகள் சந்திக்க நேரிடும் அச்சுறுத்தல்களுக்கும் எதிர்ப்புகளுக்கும் நடுவே அவர்களுக்கு கிடைக்கும் குறைந்தபட்ச அங்கீகாரம்கூட, சாதி ஒழிப்புப் போராளிகளுக்கு கிடைப்பதில்லை. மனதையும் உடலையும் வருத்திக் கொள்வதிலேயே சாதி ஒழிப்புப் போராளிகளின் பயணம் நீடிக்கிறது. அதை விரும்பி ஏற்று, அயராது தொடர்பவர்களாலேயே சமூக விடுதலையும் சாத்தியமாகிறது. இதை மெய்ப்பிக்கும் வகையில் பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் அண்மையில் கையிலெடுத்த ஒரு பிரச்சினை நமக்கு நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

திண்டுக்கல் மற்றும் பழனி மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் இன்று வரையிலும் தேநீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறையும், இரட்டை இருக்கை முறையும் நிலவி வருகிறது. சாதி இந்துக்களுக்கு, கண்ணாடி குவளையிலும், தலித் மக்களுக்கு பிளாஸ்டிக் குவளையிலும் தேநீர் வழங்கப்படுகிறது. மேலும், தலித் மக்கள் அமர்வதற்கு சற்றே தாழ்ந்த பெஞ்சோ, சிமெண்ட் திண்ணை அல்லது தரையோதான் ஒதுக்கப்படுகிறது. இக்கொடுமைகளை எதிர்த்து, பெரியார் திராவிடர் கழகத்தினர் 11.4.2007 முதல் பிரச்சாரப் பயணத்தை மேற் கொண்டனர். இதனால் சாதி இந்து கவுண்டர்களால் மிரட்டி விரட்டப்பட்டுள்ளனர்.

“முதலில் இரட்டை டம்ளர் முறை ஒழிப்பு பற்றி மட்டுமே பிரச்சாரம் செய்யலாம் எனத் திட்டமிட்டிருந்தோம். அச்சமயத்தில் அதாவது பிப்ரவரியில் ஒட்டன்சத்திரம் அருகே பழையபட்டி என்ற கிராமத்தில் தலித் ஒருவருக்குச் சொந்தமான பூமிதான நிலத்தை, செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஒரு குழு கைப்பற்றி, நிலத்துக்குச் சொந்தக்காரரான தலித்தை தாக்கி நிலத்திலிருந்து விரட்டியது. ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாக திண்டுக்கல் மாவட்டக் கலெக்டர் வாசுகி மற்றும் எஸ்.பி. பாரி ஆகியோர் இருந்தனர். தங்கவேல் என்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும் இதற்கு துணையாக இருந்தார். இந்தப் பிரச்சனையை கையிலெடுத்த தமிழக தலித் விடுதலை இயக்கம், பெரியார் திராவிடர் கழகத்தின் ஆதரவைக் கோரியது. அச்சமயத்தில் அப்பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் பஞ்சமி நிலங்கள் பற்றியும் அறிந்தோம். எனவே, இரண்டு பிரச்சனைகளையும் இணைத்துப் பிரச்சாரத்தைத் தொடங்க முடிவு செய்தோம்” என்கிறார், பெரியார் திராவிடர் கழக களப்பணி ஒருங்கிணைப்பாளர் தாமரைக் கண்ணன்.

ஏப்ரல் 11 அன்று திண்டுக்கல் மாவட்ட கிழக்கு எல்லையான குருவன் வலசில் இருந்து 20 தோழர்கள் ஒரு மினிடோரிலும், 4 இரு சக்கர வாகனங்களிலும் பயணத்தைத் தொடங்கினர். “இரட்டை டம்ளர் ஒழிப்பு பஞ்சமி நில மீட்பு இந்திய தேசிய பன்னாட்டுக் கூட்டுக்கொள்ளை எதிர்ப்புப் பயணம்’ என விளம்பரப் பதாகை பொருத்தப்பட்ட பிரச்சார வாகனத்திலேயே ஒலிபெருக்கி இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு ஊரிலும் மக்கள் அதிகம் கூடும் தேநீர்க் கடைகள் முன்பு முதலில் ஒரு பாடல் பாடி, பிறகு அரை மணிநேரம் அங்கு சாதி தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக உரை நிகழ்த்தப்படும். அப்போதே துண்டறிக்கை விநியோகம் மற்றும் உண்டியல் வசூல் என்று பிரச்சாரம் நடைபெற்றுள்ளது.

“5 நாட்கள் நடந்த இப்பிரச்சாரத்தில், உண்டியல் வசூல் 4,600 ரூபாய் என்பது மக்களிடம் உள்ள வரவேற்பைக் காட்டியது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் நாங்கள் எதிர்பாராத ஆதரவு கிடைத்தது. ஒரே நாளில் 90 “தலித் முரசு’ இதழ்கள் விற்பனை ஆனது” என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தோழர் ஜவகர்.

காவல் துறைக்கு தெரிவித்த ஊர்களைத் தவிர, இக்கொடுமை எங்கெங்கு உள்ளது என கேள்விப்பட்ட பெரும்பாலான ஊர்களுக்கும் பெரியார் திராவிடர் கழகத்தினர் சென்றுள்ளனர். குறிப்பாக, பழனி ஒன்றியத்தில் அவர்கள் பயணம் செய்த மிடாப்பாடி, மயிலாபுரம், நல்லெண்ணக் கவுண்டன் புதூர், பாப்பாகுளம், அய்யம்பாளையம், சின்னாக் கவுண்டன் புதூர், வேலாயுதம்பாளையம் புதூர், காவலப்பட்டி ஆகிய ஊர்களிலும், தொப்பம்பட்டி ஒன்றியத்தில் கோவில் அம்மாபட்டி, அத்திமரத்துவலசு, ராஜாம்பட்டி, பணம்பட்டி, அக்கரைப்பட்டி, சரவணப்பட்டி, ஆலாவலசு, புலாம்பட்டி, வாகரை, மரிச்சிலம்பு, போதுப்பட்டி, கொழுமங்கொண்டான், சங்கஞ்சட்டிவலசு, பெரியமொட்டனூத்து, தாளையுத்து, நாச்சியப்பன்கவுண்டன் வலசு ஆகிய ஊர்களில் இரட்டை பெஞ்ச் முறையும், இரட்டை டம்ளர் முறையும் உள்ளதை நேரில் பார்த்துள்ளனர்.

“முதலில் எதிர்ப்பு வரவில்லை. சேரிகளுக்குச் சென்று அங்குள்ள கொடுமைகள் பற்றி விசாரித்தோம். வேலாயுதம்பாளையம் புதூர் என்ற ஊரில் அப்படிப் பேசுவதைப் பார்த்த கவுண்டர்கள் சிலர், நாங்கள் கிளம்பியதும் தலித்துகளிடம் மிரட்டும் தொனியில் பேசியதைப் பார்த்தோம். எனவே, தலித்துகளிடம் வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்தோம். முதல் நாள் அய்யம்பாளையம் என்ற ஊரில் ஆங்காங்கே தனியாக நின்றுகொண்டு கண்டபடி ஆபாசமாக சாதி இந்துக்கள் திட்டத் தொடங்கினர். பெரும்பாலும் அனைத்து வகையான கெட்டவார்த்தைகளையும், முறைப்புகளையும் கண்டோம்” என்கிறார் தாமரைக் கண்ணன்.

ஏப்ரல் 11 அன்று தொடங்கிய பயணம் பழனி மற்றும் தொப்பம்பட்டி ஒன்றியங்களில் உள்ள பல கிராமங்களைக் கடந்து ஏப்ரல் 15 அன்று மாலை 5 மணிக்கு திண்டுக் கல் மாவட்டம் தொப்பம்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த வாகரையை அடைந்தது. பிரச்சாரக் குழுவினர், ஒலிபெருக்கியில் துண்டறிக்கையை முதலில் வாசித்தனர். “நாங்க துண்டறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே அவ்வூரைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர், பிரச்சாரக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் செல்லத்துரையை அழைத்து “மரியாதையாகக் கூட்டத்தை நிறுத்து’ என்றனர். சிறிது சிறிதாக மக்கள் குவியத் தொடங்கினர். தேநீர்க் கடையில் இருந்த நானும் தோழர் மருத மூர்த்தியும் அங்கு ஓடினோம். “மரியாதையாக ஓடிவிடுங்கள். இரட்டை டம்ளர் அது இதுன்னு பேசினா… உயிரோட போக மாட்டீங்க. ஓடுங்கடா முதல்ல’ என்றனர். கடுமையான கெட்டவார்த்தை ஒன்றால் திட்டினர். தோழர் மூர்த்தி கொஞ்சம் ரோஷப்பட்டு, முகத்தில் கொஞ்சம் கோபத்தைக் காட்டிவிட்டார். உடனே ஒரு பத்துப்பேர் சேர்ந்து அவரைப் பிடித்துக் கீழே தள்ளினர். வேறொரு டீக்கடையில் இருந்து பிற தோழர்கள் ஓடிவந்தனர். வாகனத்தை சுமார் 50 பேர் சூழ்ந்து கொண்டனர். என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பெட்ரோலை எடுத்துட்டு வாடா, வண்டியக் கொளுத்தணும் எனக் காட்டுக் கூச்சல் கேட்டது. தோழர் ஜவகர் அவர்களைத் தடுத்துக் கொண்டிருந்தார்.

“என்ன சொல்ல வர்றோம்னு கொஞ்சம் கேட்டுட்டுப் பேசுங்க, என நானும் கெஞ்சிப் பார்த்தேன். “பாத்தா படிச்சவன் மாதிரி இருக்க அறிவில்லையாடா ஒனக்கு? தி.க.ன்னா சாமியப் பத்திப் பேசு, 69 சதம் இடஒதுக்கீடு கேளு, அத விட்டுட்டு, இரட்டை டம்ளர்னு பேசுனா என்னடா அர்த்தம்? ஒரு மாசமா இங்க பிரச்சனை நடந்துகிட்டு இருக்கு, இங்க வந்து கலகம் பண்றீங்களா? யார் சொல்லிடா வந்தீங்க? எங்க பஞ்சாயத்து தலைவன் சொன்னானா? என்று கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார் ஒருவர். கூட்டமோ, என்னடா பேச்சு ஊத்துடா பெட்ரோல என்றது. சரி நாங்க பேசல. இப்படியே போயிடறோம் என்றோம். ஓடுங்கடா ஓடுங்கடா என விரட்டி விட்டனர்” என்கிறார் தாமரைக்கண்ணன்.

தேவகோட்டை பகுதியில் ‘நாடு’ அமைப்பு உள்ளது போல பழனி, தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஒன்றியங்களில் உள்ள சாதி இந்து கவுண்டர்கள், சாதி வளர்ச்சிக்காக நிதி திரட்டி ஒருங்கிணைப்பாக உள்ளனர். இக்கிராமங்கள் “பண்டு கிராமங்கள்’ (Fund) என்று குறிப்பிடப்படுகின்றன. இக்கிராமங்களில் காவல் துறையோ, இந்திய அரசியல் சட்டமோ – சாதி இந்துக்களை மீறி எதுவும் செய்ய முடியாது. ஒரு ஊரில் தலித் மக்கள் ஏதாவது கலகம் செய்தால், கிட்டத்தட்ட 50 கி.மீ. சுற்றளவில் அவர்கள் பிழைக்க வழியிருக்காது என்ற நிலையை பண்டு கிராமங்கள் உருவாக்கியுள்ளன. வாகரை அம்மாதிரியான கட்டமைப்பில் உள்ள ஒரு கிராமம்.

வாகரையின் பஞ்சாயத்து தலைவராக இருப்பவர் பூசாரிக் கவுண்டன் வலசைச் சேர்ந்த அருந்ததியரான சின்னான். இவர் குடியிருக்கும் பூசாரிக் கவுண்டன் வலசு பகுதிக்கு குடிநீர் வசதி செய்து தருவதற்காக வாகரையிலிருந்து பைப்லைன் போட்டுள் ளார். சாதி இந்துக்கள் அந்த பைப் லைனை வெட்டி, தண்ணீர் கொண்டு செல்லவிடாமல் தடுத்துவிட்டனர். பிறகு மீண்டும் பைப்லைன் பதிக்கிறார். அதையும் சாதிவெறியர்கள் வெட்டி விட்டனர். எனவே, இது பற்றி தொப்பம்பட்டி பி.டி.ஓ.விடம் புகார் செய்த தலைவர், சின்ன தொப்பம்பட்டி பி.டி.ஓ. அலுவலகம் சென்றபோது, அவரை அலுவலக வாசலிலேயே கவுண்டர்கள் அடித்து உதைத்தனர். இது தொடர்பாக கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பிறகு பஞ்சாயத்து தலைவர் சின்னான், சி.பி.எம். ஒன்றிய செயலாளர் அருள்செல்வனை அணுகி ஆதரவு கோரியுள்ளார். அதன் பிறகுதான் சட்டமன்றத்தில் இப்பிரச்சனை எழுப்பப்பட்டது.

உடனே திண்டுக்கல் கலெக்டர் வாசுகி வாகரைக்கு நேரில் சென்று விசாரித்து அங்கே இரட்டை டம்ளர் முறையோ, எந்த அடக்குமுறைகளுமோ கிடையாது என அறிவித்தார். தலைவர் சின்னõனும் அவ்வாறே கூற வைக்கப்பட்டார். பிறகு ஜெயா டி.வி.யில் கொடுமை நடப்பதாக தொலைபேசியில் கூறினார். இந்த சிக்கல் அண்மையில் நடந்துள்ளதால், அந்த பஞ்சாயத்து தலைவர் சின்னான் சொல்லித்தான் பிரச்சாரக் குழுவினர் வந்திருப்பார்கள் என சாதி இந்துக்கள் கருதியிருக்கின்றனர். அதன் பிறகு பிரச்சாரக் குழுவினர் அங்கிருந்து தப்பி 12 கி.மீ. தொலைவிலுள்ள கள்ளிமந்தையம் காவல் நிலையத்தில் புகார் தந்துள்ளனர். உதவி ஆய்வாளர் சீனிவாசன் புகாரை வாங்க மறுத்திருக்கிறார்.

“யாரைக்கேட்டு அங்கு சென்றீர்கள்? யாரைக் கேட்டு உள்ளே நுழைந்தீர்கள்’ என மிரட்டி, புகாரையும் வாங்க மறுத்திருக்கிறார். அதற்குள் செய்தி கேள்விப்பட்டு பழனி ஒட்டன்சத்திரம் பகுதியிலிருந்து சுமார் 50 தோழர்கள் காவல் நிலையம் முன் திரண்டனர். அதே நேரத்தில் துண்டறிக்கையில் இருந்த தாமரைக் கண்ணனின் எண்ணை வைத்து, பண்டு கிராமப் பகுதியிலிருந்து அவரது எண்ணுக்கு ஒருவர் தொடர்பு கொண்டுள்ளார். தன்னை ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர் என அறிமுகப்படுத்திக் கொண்ட அவர், “உங்களைத் தாக்க பண்டு கிராமம் எல்லாம் திரளுகிறது. உடனே கள்ளிமந்தையத்தை விட்டுக் கிளம்புங்கள்’ என்று கூறியுள்ளார்.

இருப்பினும், புகார் கொடுக்காமல் அங்கிருந்து செல்ல மனமின்றி பிரச்சாரக் குழுவினர் புகாரை வாங்கச் சொல்லி, உதவி ஆய்வாளரிடம் வாதம் செய்து கொண்டி ருந்திருக்கின்றனர். அச்சமயம், இரவு 7 மணி அளவில் 2 மினி லாரிகளில் சாதி இந்துக்கள் சுமார் 100 பேர் அங்கு வந்து இறங்கினர். 7.15 மணியளவில் மீண்டும் 2 மினி லாரிகளில் ஆட்கள் இறங்கினர். காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் மட்டுமே இருந்திருக்கிறார். காவலர்கள் யாரும் இல்லை. அதனால் அந்த உதவி ஆய்வாளர் வெளியே வந்து கவுண்டர்களிடம் பேசி, “உங்கள் புகாரைக் கொடுங்கள் வாருங்கள்’ எனக் கூறி, அவர்களைத் தனியே அழைத்துச் சென்றுள்ளார். கவுண்டர்கள் விலகிச் சென்ற உடன், பிரச்சாரக் குழுவினர் தப்பி ஓடி வந்துள்ளனர்.

ஆனால், இப்பிரச்சினையை பெரியார் திராவிடர் கழகத்தினர் இத்துடன் விடுவதாக இல்லை.

“எத்தனை நாட்கள்தான் மென்மையாகப் போராடுவது? சாதி வெறியர்களுக்கு அழுத்தமாக உணர்த்தும் வகையில் எங்களது அடுத்தகட்ட நடவடிக்கை இருக்கும். ஒத்த கருத்துள்ள அமைப்புகள், தோழமை இயக்கங்கள் ஆகியவற்றையும் இணைத்துக் கொண்டு, அதே கிராமங்களில் ஆகஸ்டு 15 அன்று இரட்டை டம்ளர் மற்றும் இரட்டை பெஞ்சு உடைப்புப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அது வரையில் மே 26 தொடங்கி அக்கிராமங்களில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களை அணி திரட்டும் பணிகளை செய்யத் திட்டமிட்டுள்ளோம்” என்கிறார் பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி.

உண்மைதான். சாதியின் கோர முகத்தை மென்மையான கரங்களால் பிய்த்து எறிய முடியாது. சாதி தனது இருப்பை என்றுமே மென்மையாக வெளிக் காட்டியதில்லை. கீழ் வெண்மணி, மேலவளவு, கயர்லாஞ்சி என எங்கும் நாம் கண்டது, சாதியின் கொடூர முகத்தை மட்டுமே. எதிர்ப்புகளும் போராட்டங்களும் மட்டும் எதற்கு மென்மையாய்?

படித்தது.

ஜாதி, தலித் விடுதலை இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

அயோத்தியில் மசூதி கட்ட அத்வானி கோரிக்கை?!

மும்பை புறநகர் ரயில்களில் கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி தொடர் குண்டுகள் வெடித்தன. அந்த சம்பவத்தில் 187 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பலர் படுகாயமடைந்தனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்தவர்களில் பரக் சவந்த் மற்றும் அமித் சிங் என்னும் இருவர் இன்னும் “கோமா’ நிலையில் சிகிச்சை பெறுகின்றனர். அவர்களுடைய குடும்பத்தினரை பா.ஜ.க முன்னாள் தலைவர் அத்வானி நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அதன் பிறகு, நிருபர்களிடம் அத்வானி பேசுகையில், “மத்திய அரசு, ரயில்வே துறை மற்றும் மாநில அரசு இணைந்து, குஜராத், கோவை, மும்பை, மாறாடு முதலிய கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி மற்றும் மறுவாழ்வு அளிக்க விரைந்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இன்னும் பலருக்கு நிவாரண உதவி கிடைக்கவில்லை என்று தெரிவித்தனர். இந்த சம்பவம்கள் நடந்து பல 11 மாதங்கள் கடந்தும், வழக்கு விசாரணைகள் முடியாமல் இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. அதனால், இவ்வழக்குகளை விரைவாக முடித்து, எங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும்’ என்றார். மேலும், “எங்களால் இடிக்கப்பட்ட இந்தியவரலாற்றுசின்னம் பாபர் மஸ்ஜிதை திரும்ப எழுப்பவும் நாட்டில் அமைதி ஏற்பட ஆர்.எஸ்.எஸ் உட்பட அனைத்து தனியார் மத/இன அமைப்புகளை தடை செய்யவும் மத்திய அரசும் உச்சநீதி மன்றமும் ஆவன செய்ய வேண்டும்” என கோரிக்கை வைத்தார்.

அடவேற ஒண்ணுமில்லீங்க. அத்வானிஜி தனது கடைசி காலத்தில், உண்மையிலேயே இந்திய நாட்டின் மீது பற்று கொண்டு பேட்டி கொடுத்தால் எப்படி இருக்கும் என நினைத்துப் பார்த்தேன். அவ்வளவு தான்.

ஆர்.எஸ்.எஸ், சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

அதிசயம் – அந்தோணியார் தலையில் இரத்தம்!

சிதம்பரத்திலுள்ள புதுச்சத்திரம் அருகே பெரியபட்டு கிறிஸ்துவ தேவாலயத்தில் அந்தோனியார் சிலையின் தலையிலிருந்து ரத்தம் வழிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அடுத்த பெரியபட்டு கிராமத்தில் பல நூற்றாண்டுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட தேவாலயம் ஒன்று உள்ளது. இதில் ஆரோக்கியதாஸ் என்பவர் பங்கு தந்தையாக உள்ளார். இவர் ஆலய வளாகத்தில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறார். இந்த ஆலயத்தில் புதுச்சத்திரம், பெரியபட்டு உள்ளிட்ட பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து கிறிஸ்துவர்கள் வழிபாட்டுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 1 மணியளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பங்குதந்தை ஆரோக்கியதாஸ் சத்தம் போட்டு கத்தினார். உடன் ஆலய வளாகத்தின் வெளியில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் சென்று பார்த்த போது ஆரோக்கியதாஸ் மயங்கிய நிலையில் கிடந்தார். அவர் மயக்கம் தெளிந்து பேசும்போது, “ஏதோ ஒரு அசம்பாவிதம் நடந்துள்ளது. எனது தலையில் பலத்த அடிபட்டது போல் உணர்ந்தேன். நான் மயங்கி விழுந்ததும் ஒன்றும் புரியவில்லை. நீங்கள் உடனடியாக ஆலயத்தின் உள்ளே சென்று பாருங்கள்” என்று கூறினார்.

உடன் அங்கிருந்தவர்கள் ஆலயத்தை திறந்து சென்று பார்த்த போது அங்குள்ள அந்தோனியார் சிலையின் தலை பகுதியில் இருந்து ரத்தம் வடிந்து கொண்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். காட்டுத்தீ போல் பரவிய இச்செய்தி அறிந்து அப்பகுதி பொது மக்கள் நேற்று காலை முதல் ஆலயத்திற்கு வந்து அந்தோணியார் சிலையின் தலையிலிருந்து வடியும் இரத்தத்தை ஆச்சரியத்தோடு பார்த்துச் செல்கின்றனர்.

அதிசயம் இல் பதிவிடப்பட்டது . 3 Comments »