கருணாவின் துரோகச் செயலைப் புரிந்து கொண்டிருந்த தளபதிகள், பொறுப்பாளர்கள் தமது ஆதங்கத்தையும் அடுத்து அவர்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் யாருடன் கதைப்பது என்று தெரியாது திணறுகின்றனர். பிறிதொருவருடன் கதைக்கும் பட்சத்தில் என்ன நடக்குமோ என அஞ்சி அவர்கள் தங்களுக்குள்ளே பல திட்டங்களைப் மனசுக்குள் போராடுகின்றனர்.
இவ்வாறு நிலைமைகள் காணப்பட, கருணாவும் தனது துரோகச் செயல் தன்னுடன் இருந்தவர்களுக்குத் தெரியவந்துள்ளது என்பதையும் அறிந்து கொண்டார். தனது துரோகத்தனத்தால் தனது உயிருக்கு எந்தவகையில் ஆபத்துகள் வரும் என்பதை கருணா சரிவரவே புரிந்துகொள்கிறார். தரைக் கரும்புலிகளால் தனது உயிர் பறிக்கப்படலாம் அல்லது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளிகளால் தனது உயிர் எடுக்கப்படலாம் என்பதை புரிந்து கொண்ட கருணா அடுத்தகட்டமாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார்.
முதலில் மட்டக்களப்பில் இருந்கும் கரும்புலி வீரர்கள் மற்றும் புலனாய்வு வேலை செய்யும் பொறுப்பாளர்கள் போராளிகளை தனது விசுவாசிகள் மூலம் கைது செய்கிறார். அப்போராளிகளைக் கண்மண் தெரியாது தடிகள், கம்பிகள், கட்டைகள் கொண்டு கருணாவின் தலைமையில் அவரது விசுவாசிகள் அடிக்கின்றார்கள். இதனால் பயிற்சி முகாம் முழுவதும் அப்போராளிகளின் அழு குரல் ஒலித்த வண்ணம் இருந்தது.
கருணா ஏன் தங்கள் மீது இவ்வாறு நடந்துகொள்கிறார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? என பல கேள்விகள் போராளிகள் மனதில் வந்து சென்றன. கருணாவின் துரோகத்தைப் புரிந்துகொள்ள முடியாத போராளிகள் கருணாவின் சதி வலைக்குள் சிக்கி அடிகாயங்களுடன் இரத்தம் ஓட ஓட கால்கள், கைகள் முறிக்கப்பட்டு பயிற்சி முகாமின் வெட்டையில் நடுவெய்யிலில் குற்றுயிருடன் இழுத்துக் கொண்டு போடப்படுகிறார்கள்.
இதனைப் பார்த்துக்கொண்டு போராளிகள் அனைவருக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. தளபதிகள் சிலருக்கும் பொறுப்பாளர் சிலருக்கும் இந்த கருணாவின் சதி நாடகம் என்ன என்பது தெளிவாகவே புரிந்தது. தளபதிகள் மற்றும் பொறுப்பாளார்கள் சிலர் ஒரு சில முடிவை எடுக்கின்றனர். இப்பிரச்சினையை கருணாவுடன் கதைத்தால் நமக்கும் இதே கதிதான் என்பதை உணர்ந்து கொள்கின்றனர். வழமை போன்று எதுவும் அறியாதவர்கள் போல் மிகவும் குழப்பத்தில் இருந்து கொண்டு தமது தேசியத் தலைவருக்கு தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு அங்கிருந்து தப்புவதற்கான திட்டங்கள வகுக்கின்றனர்.
இதற்கிடையில் கருணா சில தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களை தனித் தனியே அழைத்து தான் பிரிந்து செல்லும் தனது முடிவை விளங்கப்படுத்துகிறார். இதனால் மூத்த போராளிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் அவர்களால் கருணாவுக்கு நல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டன.
(தொடரும்)