அடுத்த இரண்டு வாரத்துக்குள் டெல்லியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை செய்துள்ளது. இதை தொடர்ந்து பஸ், ரெயில் நிலையங்கள் உட்பட நகரம் முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பாகிஸ்தானை மையமாக கொண்டு இயங்கும் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹர்கத் உல் ஜிஹாதி அல் இஸ்லாமி (ஹூஜி) ஆகிய இயக்கங்களை சேர்ந்த தீவிரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கோர்ட்டுகளில் அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இந்த நிலையில் தலைநகர் டெல்லியில் மிகப்பெரிய அளவில் தாக்குதல் நடத்த இருப்பதாக உளவுத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்துமாறு டெல்லி போலீஸ் கமிஷனர் ஒய்.எஸ்.அத்வாலுக்கு உளவுத் துறை எச்சரிக்கை விடுத்தது. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்த தகவலை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில், “டெல்லியில் வசிக்கும் சிலருடைய உதவியோடு மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்று போலீஸ் கமிஷனருக்கு உளவுத்துறை எச்சரித்துள்ளது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் இந்த தாக்குதல் நடைபெறும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது” என்றார்.
இதையடுத்து டெல்லியில் உள்ள அனைத்து உதவி போலீஸ் கமிஷனர்களுக்கும் அத்வால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி, நகரில் உள்ள அனைத்து இன்டெர் நெட் மையங்களிலும் வாடிக்கையாளர்களின் விவரங்களை பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அவர்களது `கம்ப்யூட்டர் லாக் கோடு’ குறித்த விபரங்களையும் சேகரிக்குமாறு கூறப்பட்டுள்ளது. சமீப காலமாக இன்டெர் நெட் மூலமாகவே தீவிரவாதிகள் தகவல் பரிமாற்றம் செய்து வருவதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தவிர மார்க்கெட் பகுதிகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் ரெயில் மற்றும் பஸ் நிலையங்கள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. வெடிகுண்டு செயலிழக்க செய்யும் படையினர், அதிரடி படையினர், மோப்ப நாய்கள் மற்றும் பல்வேறு சிறப்பு பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
டெல்லிக்குள் நுழையும் அனைத்து எல்லைகளிலும் கூடுதல் கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள ஓட்டல்களில் தங்கி இருப்பவர்கள் மற்றும் வாகன நிறுத்தங்களில் இருக்கும் வாகனங்கள் குறித்த முழு விவரங்களையும் பட்டியல் போட்டு வைத்து இருக்குமாறு ஓட்டல்களின் உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். – செய்தி.
நாட்டில் என்ன நடக்கின்றது என்பதே புரியவில்லை. நந்திகிராமும், குஜராத்தும் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில் இன்னும் இரு வாரத்தில் குண்டு வெடிக்கும் ஆபத்தாம்.
இந்தியப் பாராளுமன்றத் தாக்குதல் நடப்பதற்கு முன்னர் எல்.கெ.அத்வானி அவர்களும் இதே போன்றதொரு அறிக்கை தான் விடுத்திருந்தார். அவர் குறிப்பிட்ட நாட்களுக்குள் பாராளுமன்றத்தின் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு, தாக்குதலில் ஈடுபட்ட அனைத்து தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
இதுவரை அத்தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்த முழுமையான தகவல்கள் கண்டுபிடிக்கப்படவில்லை. முன்னரே ஞானக்கண் கொண்டு சம்பவத்தைக் குறித்து முன்னறிவிப்புச் செய்த தேசப்பற்றாளர் எல்.கே.அத்வானி இப்பொழுதும் ஹாயாகச் சுற்றி திரிகிறார்.
இப்பொழுது அதே போன்ற ஓர் முன்னறிவிப்பு உளவுத்துறையிடமிருந்து.
குறிப்பிடுவது போன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்கட்டும். அவ்வாறு நடைபெற்றால்……?