கருணாவின் அந்தரங்கம் 5.

கருணாவின் துரோகச் செயலைப் புரிந்து கொண்டிருந்த தளபதிகள், பொறுப்பாளர்கள் தமது ஆதங்கத்தையும் அடுத்து அவர்கள் செய்ய வேண்டிய நடவடிக்கைகளையும் யாருடன் கதைப்பது என்று தெரியாது திணறுகின்றனர். பிறிதொருவருடன் கதைக்கும் பட்சத்தில் என்ன நடக்குமோ என அஞ்சி அவர்கள் தங்களுக்குள்ளே பல திட்டங்களைப் மனசுக்குள் போராடுகின்றனர். 

இவ்வாறு நிலைமைகள் காணப்பட, கருணாவும் தனது துரோகச் செயல் தன்னுடன் இருந்தவர்களுக்குத் தெரியவந்துள்ளது என்பதையும் அறிந்து கொண்டார். தனது துரோகத்தனத்தால் தனது உயிருக்கு எந்தவகையில் ஆபத்துகள் வரும் என்பதை கருணா சரிவரவே புரிந்துகொள்கிறார். தரைக் கரும்புலிகளால் தனது உயிர் பறிக்கப்படலாம் அல்லது விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் போராளிகளால் தனது உயிர் எடுக்கப்படலாம் என்பதை புரிந்து கொண்ட கருணா அடுத்தகட்டமாக திட்டம் ஒன்றை தீட்டுகிறார்.

முதலில் மட்டக்களப்பில் இருந்கும் கரும்புலி வீரர்கள்  மற்றும் புலனாய்வு வேலை செய்யும் பொறுப்பாளர்கள் போராளிகளை தனது விசுவாசிகள் மூலம் கைது செய்கிறார். அப்போராளிகளைக் கண்மண் தெரியாது தடிகள், கம்பிகள், கட்டைகள் கொண்டு கருணாவின் தலைமையில் அவரது விசுவாசிகள் அடிக்கின்றார்கள். இதனால் பயிற்சி முகாம் முழுவதும் அப்போராளிகளின் அழு குரல் ஒலித்த வண்ணம் இருந்தது.

கருணா ஏன் தங்கள் மீது இவ்வாறு நடந்துகொள்கிறார்? நாங்கள் என்ன தவறு செய்தோம்? என பல கேள்விகள் போராளிகள் மனதில் வந்து சென்றன. கருணாவின் துரோகத்தைப் புரிந்துகொள்ள முடியாத போராளிகள் கருணாவின் சதி வலைக்குள் சிக்கி அடிகாயங்களுடன் இரத்தம் ஓட ஓட  கால்கள், கைகள் முறிக்கப்பட்டு பயிற்சி முகாமின் வெட்டையில் நடுவெய்யிலில் குற்றுயிருடன் இழுத்துக் கொண்டு போடப்படுகிறார்கள்.

இதனைப் பார்த்துக்கொண்டு போராளிகள் அனைவருக்கும் இங்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை. தளபதிகள் சிலருக்கும் பொறுப்பாளர் சிலருக்கும் இந்த கருணாவின் சதி நாடகம் என்ன என்பது தெளிவாகவே புரிந்தது. தளபதிகள் மற்றும் பொறுப்பாளார்கள் சிலர் ஒரு சில முடிவை எடுக்கின்றனர். இப்பிரச்சினையை கருணாவுடன் கதைத்தால் நமக்கும் இதே கதிதான் என்பதை உணர்ந்து கொள்கின்றனர். வழமை போன்று எதுவும் அறியாதவர்கள் போல் மிகவும் குழப்பத்தில் இருந்து கொண்டு தமது தேசியத் தலைவருக்கு தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்பதில் உறுதிகொண்டு அங்கிருந்து தப்புவதற்கான திட்டங்கள வகுக்கின்றனர்.

இதற்கிடையில் கருணா சில தளபதிகள் மற்றும் பொறுப்பாளர்களை தனித் தனியே அழைத்து தான் பிரிந்து செல்லும் தனது முடிவை விளங்கப்படுத்துகிறார். இதனால் மூத்த போராளிகள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது. அத்துடன் அவர்களால் கருணாவுக்கு நல்ல அறிவுரைகள் வழங்கப்பட்டன.

(தொடரும்)

படித்தது

ஈழப்போராட்டத்தில் தென்னிந்திய கட்சிகளின் ஈடுபாடு…..?

nedumaran.jpgஈழப்போராட்டம் குறித்து எனக்கு மாறுபட்ட கருத்துக்கள் உண்டு. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு வேறு சில விஷயங்களை அலசலாம். சமீபகாலமாக ஈழப்பிரச்சினையில் இரண்டு குரல்களை மீண்டும் மீண்டும் கேட்கநேர்கிறது.

குரல்1 : ஈழப்போராளிகள் திராவிட இயக்கங்களோடு கொண்ட தொடர்பால்தான் போராட்டம் திசைமாறிப்போனது.

‘தமிழீழப் போராட்டத்தில் தந்தை பெரியாரின் தாக்கம்’ என்ற பெயரில் ஒரு கட்டுரை ‘திராவிடத்தமிழர்கள்’ வலைத்தளத்தில் வெளியாகியிருந்தது.

தேசியத்தை மறுத்து பெரியார் பேசிய பேச்சு 1932ல் அவர் இலங்கையில் ஆற்றிய உரை என்பது குறிப்பிடத்தக்கது. எனவே விடுதலைப்புலிகள் இயக்கம் பெரியாரின் ஆலோசனையின் பெயரில்தான் தொடங்கப்பட்டது என்பதில் எல்லாம் எவ்வளவு சரியான தரவுகள் அடங்கியிருக்கின்றன என்பது சந்தெகம்தான். அதேநேரத்தில் இல்லாத பெரியாரை வைத்து அனுமானங்களைத் தோற்றுவிப்பதிலும் அர்த்தமில்லை.

ஆனால் திராவிடக் கட்சிகளும் பெரியாரியக்கங்களும் ஈழப்போராட்டத்திற்கும் போராளிகளுக்கும் பலவகையில் உதவிப் பல்வேறு நெருக்கடிகளைச் சந்தித்திருக்கின்றன என்பது மறுக்கமுடியாத உண்மை. திமுகவின் முன்னாள் அமைச்சர் சுப்புலெட்சுமி ஜெகதீசன் மதிமுக தலைவர் வைகோ ஆகியோர் புலி ஆதரவு என்பதற்காகவே சிறையில் வாடியவர்கள்.

பெரியாரியக்கங்களின் பங்கும் இதில் மகத்தானவை. ராஜீவ் கொலைவழக்கில் பாதிக்கப்படட்வர்களில் பாதிக்கும் மேற்படவர்கள் திராவிடர்கழகத்தோழர்களே. திராவிடர்கழகம் மட்டுமல்லாது தி.கவிலிருந்து வெளியேறிய பெரியாரியக்கங்களும் ஈழ ஆதரவினால் சந்தித்த இன்னல்கள் அளவிடற்கரியவை.

‘பெரியார் மய்யம்’ என்றும் ‘திராவிடர் மனித உரிமை அமைப்பு’ என்னும் பெயரிலும் இயங்கிவந்த அமைப்பு ஈழத்தில் போய் ஆயதப்பயிற்சி எடுத்துவந்ததால் அந்த அமைப்பு தமிழகத்தில் பல போலிஸ் நெருக்கடிகளைச் சந்தித்து இல்லாமலே போனது. பெரியார் திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர்.கோவை ராமகிருஷ்ணன் தடா மிசா என்னும் இரு கருப்புச்சட்டங்களால் நெடுங்காலம் சிறையிலடைக்கப்பட்டார். ஈழ ஆதரவினால் தோழர் கொளத்தூர் மணி சந்தித்த இன்னல்களும் அதிகம்.

ஈழ ஆதரவு என்னும் நிலைப்பாட்டில் வேறுயாரையும்விட அதிகம் உறுதியுடன் நிற்பதும் அதற்காகப் பல இழப்புகளையும் சந்தித்தும் பெரியாரியக்கத்தோழர்கள் மட்டுமே. இப்போது ஈழத்தமிழர்கள் மற்றும் தமிழ்த்தேசிய ஆதரவாளர்கள் பலரின் ஆதர்சமாய் இருப்பவர்கள் நெடுமாறனும் திருமாவளவனும்.

நெடுமாறன் இந்தியத்தேசிய காங்கிரசின் தமிழாநாட்டு தலைவராக இருந்தவர். இந்திராகாந்தி மீதான ‘கொலைமுயற்சி’யிலிருந்து அவரைக் காப்பாற்றிய ‘பெருமை’யும் அவரையே சாரும். அவர் எப்படித் திடீர்த்தமிழ்த்தேசியவாதியானார் எனப்து அவர் நம்பிக்கை வைத்திருக்கும் ‘முருகனுக்கே’ வெளிச்சம்.

ஆரம்பத்தில் பிரபாகரனை வெள்ளாளர் என்று நினைத்து அவர் ஆதரித்திருக்கக்கூடும். பிறகு பிரபாகரன் கரையாளர் என்று தெரிந்ததும் ‘பிரபாகரன் ஒரு தலித்’ என்று தலித்முரசு நேர்காணலில் பேட்டிகொடுத்து அந்தர்பல்டி அடித்தார்.

மார்க்சியம் பெரியாரியம் தலித்தியம் என எந்தவித தத்துவங்களின் அடிபப்டையுமற்ற புண்ணாக்குக் கட்சிதான் அவரது ‘தமிழர்தேசிய இயக்கம்’. அவர் கட்சியின் தேசிய உடை என்ன தெரியுமா? தைப்பூசத்திற்கு காவடிதூக்க முருகபக்தர்கள் அணிவார்களே அந்த மஞ்சளாடை. நெடுமாறன் எந்தளவிற்கு ‘மாவீரன்’ போராளி’ என்றால் தனது தமிழர்தேசிய இயக்கம் ஜெயலிதா அரசால் தடைசெய்யப்பட்டபின்னும் அதற்கெதிராக மகக்ளைத் திரட்டவோ போராடவோ தைரியமில்லாத அளவிற்கு.

திருமாவளவன் ஈழ ஆதரவாளரான கதையைப் பார்ப்போம். தேர்தல் அரசியலுக்கு வருவதற்கு முன்புவரை ஈழப்பிரச்சினை குறித்து திருமாவிற்கு ஒரு கருத்தும் இருந்ததில்லை. இப்போது திடீரென்று அவரும் புலிவேஷம் ஆடுகிறார்.

ஆப்பிரிக்க நிலப்பகுதியில் கருப்பர்களின் உரிமைகளுக்காக ஆரம்பிக்கப்பட்டதுதான் கருஞ்சிறுத்தைகள் அமைப்பு. அதன் பாதிப்பில் மகாராட்டிரத்தில் தொடங்கப்படட்துதான் இந்திய விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு. அதன்கிளையாக தமிழகத்தில் தொடங்கப்பட்டதுதான் டி.பி.அய். மலைச்சாமிக்குப்பிறகு அந்தப் பொறுப்பிற்கு வந்தவர் திருமாவளவன். ஆனால் இப்போது திருமா தனது பேட்டிகளிலெல்லாம் ‘விடுதலைப்புலிகளின் பாதிப்பால்தான் விடுதலைச்சிறுத்தைகள் என்று பெயர் வைத்தேன்’ என்று சொல்லிவருகிறார்.

தேர்தல் அரசியலுக்கு வந்தபிறகு திருமாவுக்கு ஒருவிஷயம் தெளிவானது. தலித்துகளின் உரிமைகளுக்காக மட்டுமே போராடினால் சாதிக்கட்சி என்கிற பெயர்தான் தங்கும். மையநீரோட்ட அரசியலில் வெற்றிபெறவேண்டுமானால் ‘தமிழ்’ அரசியலைத் தூக்கிப்பிடிப்பது ஒன்றே சரியான வழி. அதற்கு ஏற்கனவே மருத்துவர் ராமதாஸ் முன்னுதாரணமாயிருந்தார். திமுக கைவிட்ட தமிழ் அரசியலைக் கையிலெடுத்துக்கொண்டார் திருமா. இப்படித்தான் திருமா ஈழ ஆதரவாளரானார். ஆனால் திராவிட இயகக்ங்களின் அர்ப்பணிப்பிலும் தியாகத்திலும் நூறில் ஒருபங்கு கூட திருமாவிடமோ நெடுவிடமோ காணமுடியாது.

திராவிட இயக்கங்களோடு போராளிகள் கொண்ட தொடர்பால் திராவிடக் கருத்தியல் அந்தப் போராளி இயக்கங்களைப் பாதித்ததா என்பது தெரியவில்லை. ஆனால் அதிகம் பாதிக்கப்பட்டதென்னவோ திராவிட இயக்கங்கள்தான். இப்போது திராவிட அரசியலைப் போராளிகள் கைவிடவேண்டும் (அப்படி எதுவும் இருக்கிறதா என்ன?) என்று குரல் கொடுப்பவர்களின் நோக்கம் போராளி இயக்கங்கள் முற்றுமுழுதாக இந்துத்துவ இயகக்ங்களாக மாறிவிடவேண்டும் என்னும் விருப்பமே.

ஈழப்போராட்டத்தால் தமிழ்மக்கள் மட்டுமில்லாது முஸ்லீம் மகக்ளும் கணிசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுமாதிரியான குரல்கள் அதிகரிப்பது என்பது முஸ்லீம்களை மேலும் மேலும் தனிமைப்படுத்தவும் தமிழ்-முஸ்லீம் முரண்பாடுகளை அதிகப்படுத்தவுமே உதவும். வேண்டுமானால் ஈழத்தமிழர்கள் எல்லாம் இந்துக்கள் என்றால் விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஆர்.எஸ்.எஸ் இயக்கம் தெருவில் இறங்கட்டும்.

ஒருமுறை தோழர் வ.கீதாவுடன் ஈழப்பிரச்சினை பற்ரிப் பேசிக்கொண்டிருக்கும்போது தமிழ்த்தேசியவாதிகளைப் பற்றிச் சொன்னார். ‘இவர்கள் இங்கு பண்ண முடியாத புரட்சியை ஈழம் பற்றிப் பேசித் தணித்துக்கொள்கிறார்கள்’ என்று.

சரி போகட்டும் தொப்புள்கொடி உறவு ராஜராஜ சோழன் இலங்கையைக் கைப்பற்றிய தூசிபடிந்த வரலாறுகள் நரம்பு புடைக்க காசி ஆனந்தனின் ‘பத்துதடவை பாடை வராது…’ என்றெல்லாம் பாடியும் பேசியும் திரியும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் அவர்கள் உணர்வின் அடிப்படையில் ஆதரிக்கும் வைகோவாக இருக்கட்டும் அலல்து பஞ்சத்திற்குக் கடைவிரிக்கும் திருமாவளவனாக இருக்கட்டும் இங்குள்ள ஈழத்தமிழ் அகதிகள் பற்றிப் பேசியிருப்பார்களா? அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக் குரல் கொடுத்திருப்பார்களா? ஈழப்பிரச்சினைகளுக்காக இங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் உண்ணாவிரதங்களில் எத்தனை தமிழகத்தில் வதியும் ஈழத்தமிழர்களுக்கானது?

மணியரசன் என்று ஒரு தமிழ்தேசியத் தலைவர் இருக்கிறார். ‘தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி’ என்று ஒரு கம்பெனி நடத்திவருகிறார். அவரிடமிருந்து எழுத்தாளர் ராசேந்திரசோழன் (அஷ்வகோஷ் என்ற பெயரிலும் எழுதுவார்) உள்ளிட்ட சில தோழர்கள் வெளியேறினர். ஏதாவது சித்தாந்தப் பிரச்சினைதான் காரணம் என்று நினைத்தால் நீங்கள் இந்தப் ‘புரட்சிகர’க் கட்சிகளைப் பற்றி தெரியாத அப்பாவி என்று அர்த்தம். அவர்கள் கட்சி உடைந்ததற்குக் காரணங்கள் இரண்டு. இதுபற்றி விலகிய ராசேந்திரசோழன் ‘ததேபொகவிலிருந்து விலகியது ஏன்’ என்று ஒரு சிறுநூலே எழுதியிருக்கிறார்.

ஒருகாரணம் இவர்கள் மயிலம் என்னும் ஊரில் நடத்திய சீட்டுக்கம்பெனியில் ஏற்பட்ட பிரச்சினை. (அடப்பாவிகளா புரட்சி செய்யக் கட்சிகட்டப்போகிறீர்கள் என்று நினைத்தால் கடைசியில் சீட்டுக்கம்பெனிதான் நடத்தியிருக்கிறீர்களா என்று மறுபடியும் கேட்டால் நீங்கள் மீண்டும் அப்பாவிதான்) இரண்டாவதுகாரணம் மாவீரர்நாளுக்கு உரையாற்றச் செல்லும்போது புலம்பெயர்ந்த தமிழர்கள் மணியரசனிடம் நிதியளிப்பார்கள். அதில் ஒரு பகுதியைக் கட்சிக்குக் கொடுத்துவிட்டு இன்னொரு பகுதியைத் தான் வைத்துக்கொண்டிருந்திருக்கிறார் தோழர் மணியரசன். கடைசியில் கட்சிக்கு அந்த நிதியைத் தருவதேயில்லை. ஏனென்று கேட்டதற்கு ‘என் வீட்டிற்குக் கலர்டி.வி வாங்கிவிட்டேன்’ என்றிருக்கிறார் தோழர் மணியரசன். இதைக் காரியக் கமிட்டியில் வைத்து வேறு விசாரித்திருக்கிறார்கள்.

சரி இதெல்லாம் அவர்கள் உள்கட்சி விவகார இழவு. போகட்டும். ஆனால் புகலிடத்தமிழர்களிடம் வசூலித்த தொகையில் ஒருசிறு பகுதியையேனும் வீடிழந்து நிலமிழந்து சகோதரர்களைக் கொலைக்களத்தில் பலிகொடுத்து தாயையும் சகோதரிகளையும் பாலியல் வல்லுறவில் பறிகொடுத்து தமிழகத்திற்கு ஒரு நாயை விடக் கேவலமான நிலையில் வந்துசேரும் ஒரு ஈழத்தமிழ் அகதிக்காவது நீங்கள் நிதியளித்திருப்பீர்களா?

தமிழ்வழிக்கல்விக்காகவும் இன்னபிற காரணங்களுக்கவும் நிதிவசூலித்திருக்கிறீர்களே. ஒருமுறையாவது ஈழ அகதிகளின் குறைந்தபட்ச பொருளாதார மேம்பாட்டிற்கு நிதி வசூலித்திருக்கிறீர்களா? ஓட்டுக்கட்சிகளுக்குத்தான் ஈழத்தமிழர்கள் வாக்குவங்கிகள் இல்லை என்பதால் புறககணிக்கின்றன. இந்தத் தமிழ்த்தேசியவாதிகள் ஈழ அகதிகளைப் புறக்கணிக்கக் காரணம் என்ன? வெறும் சாகசவாதப் படம் ஓட்டுவதைத் தாண்டி இவர்களால் தமிழகத்திற்கும் ஈழத்திற்கும் என்ன பிரயோஜனம்?

எனக்குத் தெரிந்து புலிகளை ஆதரிக்கும் கட்சிகளிலேயே விடுதலைச் சிறுத்தைகளின் சட்டமன்ற உறுப்பினர் எழுத்தாளர் ரவிக்குமார் மட்டும்தான் அகதிமுகாம் பற்றி ஆராய்ந்து ஒரு அறிக்கையை முதல்வரிடம் கொடுத்தார். அதேநேரத்தில் தந்திரமாக கருணாநிதியும் ஒரு அமைச்சரை அனுப்பி அறிக்கை தயாரிக்கச் சொன்னார். கடைசியில் இரண்டு அறிக்கையும் போய்ச்சேர்ந்த இடம் குப்பைத்தொட்டி.ரவிக்குமார் அறிக்கை தயாரிக்கும்போது சிறுத்தைகள் அதிமுக அணியிலிருந்தனர். இப்போது திமுக அணிக்கு வந்தபிறகு ஒருபேச்சையும் காணோம்.

புலிகளை ஆதரிப்பது ஆதரிக்காமல் இருப்பது என்பதையெல்லாம் தாண்டி ஈழ அகதிகளின் நலன்களில் அக்கறை செலுத்துவதும் கல்வி உள்ளிட்ட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காய் அரசிடம் போராடுவதும் போலீஸால் திணிக்கப்படும் பொய்வழக்குகளுக்கு எதிராய்க் குரல்கொடுப்பதும்தான் பாதிக்கப்படுபவர்களும் தமிழர்கள் என்கிற உணர்வுகளையும் தாண்டி மனித உரிமையின் அடிப்படையும் சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தின் அஸ்திவாரமுமாகும். அதுவே அறமுமாகும்.

எனவே தமிழக அரசோ இந்திய அரசோ தமிழ்த்தேசிய வீராதி வீரர் வீரபத்திரப் பேரன்களோ ஈழப்போராட்டத்திற்கும் ஈழவிடுதலைக்கும் ஒரு புல்லையும் புடுங்கவேண்டாம். அவர்கள் போராட்டத்தை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். அந்த்ப் போராட்டத்திலுள்ள பிரச்சினைகளைக் களைவதற்கும் ஜனநாயகபப்டுத்துவதற்குமான முயற்சிகளை அவர்கள் தேர்ந்துகொள்வார்கள். உங்களுக்கு மனசாட்சி என்று ஒன்றிருந்தால் இங்கு அகதியாய்த் தஞ்சமடைந்திருக்கும் ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் குறித்தும் அவர்களின் கல்வி வேலைவாய்ப்பு போன்ற அம்சங்களிலும் கவனம் செலுத்துங்கள். போலீஸ் பூச்சாண்டி போதும் நிறுத்துங்கள்.

மிதக்கும்வெளி – உரையாடவந்தவர்கள் பதிவுடன் தொடர்புடையவை

தொகுப்பு: பிரபஞ்சன்

படித்தது