கிழக்கு ஆப்கானிஸ்தான் பிரதேசமான நன்கார்ஹரில் ஏழு ஆப்கானிஸ்தான் காவலர்களை கடந்த திங்கள் கிழமை இரவு அமெரிக்க படையினர் சுட்டுக் கொன்றனர். அமெரிக்க-ஆப்கன் கூட்டு படையினர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததை தொடர்ந்து எதிர்த்து சுட்டதில் இவர்கள் இறந்ததாக அமெரிக்க படையினர் தெரிவித்தனர்.
ஆனால் இறந்தவர்கள் ஆப்கானிஸ்தான் காவலர்கள் என்பதை இதுவரை அமெரிக்க படை உறுதிபடுத்தவில்லை. ஆனால் அதே சமயம் நான்கஹார் பகுதியில் உள்ள ஒரு செக்போஸ்டின் மீது எவ்வித காரணமும் இன்றி அமெரிக்க இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ஆப்கான் காவல்துறை அமெரிக்க இராணுவத்தின் மீது குற்றம் சுமத்தியது.
அமெரிக்க தரைப்படையினரின் தாக்குதலுடன் ஆப்கான் காவல்துறையினர் மீது அமெரிக்க விமானப்படையும் குண்டுகளை பொழிந்ததாக முதிர்ந்த காவல்துறை அதிகாரி நஸிர் அஹமது கூறினார். அமெரிக்கப்படையினரின் இச்செயல் கொடூரமானது என்றும் அவர் கூறினார். துக்ககரமான விபத்து என இச்சம்பவத்தை ஆப்கான் அதிபர் கர்ஸாயின் செய்தி தொடர்பாளர் கரீம் ரஹீமி தெரிவித்தார்.
மற்றொரு சம்பவத்தில் குனார் பிரதேசத்திலும் மேற்கு ஆப்கானிஸ்தானிலும் பொது மக்களில் மூன்று பேரை நேட்டோ படை சுட்டுக் கொன்றது. செக்போஸ்டில் வாகனத்தை நிறுத்தாதை தொடர்ந்து துப்பாக்கி சூடு நடத்தியதாக நேட்டோ படை இதற்கு காரணம் கூறியது. கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்களில் 50 பேரை நேட்டோ படை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து, இது போன்ற நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வேண்டும் என நேட்டோ மற்றும் அமெரிக்க படையினரிடம் அதிபர் கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மறுமொழியொன்றை இடுங்கள்