வீர சவார்க்கர் எதில் வீரர்?

மூஞ்சே, ஹெட்கேவர், கோல்வால்கர் தொடங்கி நிறைய பேர் இருக்கும் போது, ‘ஆர்.எஸ்.எஸ். & கோ’வினரால் அதிகம் அடையாளம் காட்டப்படுவோர் வீரசிவாஜி, வீரசவார்க்கர், பாலகங்காதர திலக் ஆகியோரே. அதற்குக் காரணமும் இருக்கவே செய்கிறது. முடிசூடுவதற்காக பார்ப்பனர்களிடம் அடி பணிந்த சிவாஜியாக இருந்தாலும், காங்கிரஸ் மாநாட்டில் செருப்பை விட்டெறிந்து ரகளையில் ஈடுபட்ட ‘திலக்’காக இருந்தாலும், காந்தியார் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சவார்க்கராக இருந்தாலும் அவற்றை மறைத்து தேசியம் என்ற பொதுத் தலைப்பின்கீழ் இவர்களை அறிமுகப்படுத்தலாம் என்பதுதான் அது. இந்துத்வா என்னும் நஞ்சை புகட்டுவதற்காக சேர்க்கப்படும் தேசபக்தித் தேனாக இருக்கும் சவார்க்கருக்கு ஆபத்து என்றால், அவர்கள் தாண்டிக் குதிக்கத் தகுந்த காரணமில்லையா இது?

விநாயக் தாமோதர் சவார்க்கர், பார்ப்பனர்களிலேயே தூய பிரிவாகக் கருதப்படும் சித்பவன் பார்ப்பனக் குடும்பத்தில் பிறந்தவர். பார்-அட்-லா படிப்பதற்காக இங்கிலாந்துக்குப் போன சவார்க்கர், அங்கே “சுதந்திர இந்தியச் சங்கத்தில்” இணைந்த இந்திய மாணவர்கள் ஆயுதமேந்தக் காரணமாக இருந்ததாக இங்கிலாந்து அரசு கருதியது.

வங்காளத்தின் ‘குதிராம் போஸ்’க்கு எதிரான வழக்கில் வாதாடிய சர். கர்ஸன் என்பவரை 1909-ஆம் ஆண்டு சுட்டுக் கொன்றதாக ‘மதன்லால் திங்கரா’ என்ற சுதந்திர இந்தியச் சங்கத்தின் தீவிர உறுப்பினர் கைது செய்யப்பட்டார். அந்தக் கொலையில் வி.டி. சவார்க்கருக்கும் தொடர்பு இருந்ததாக 13.3.1910-ஆம் நாள் அவர் கைது செய்யப்பட்டார். இந்தியாவில் மேலும் விசாரணைக்காக சவார்க்கரை கப்பலில் இந்தியாவுக்குக் கொண்டு வந்தனர். வரும் வழியில் பிரான்சில் ‘மார்செய்லீஸ்’ என்ற துறைமுகத்தில் 8.7.1910-அன்று சிறுநீர் கழிக்கச் செல்வதாகக் கூறி தப்பித்துச் செல்ல முயன்று, உடனே பிடிபட்டார் சவார்க்கர். தண்டனையில் இருந்து தப்பும் எண்ணம் தொடக்கம் முதலே அவருக்கு இருந்து வந்தது. கைது செய்யப்படும் முன்பே பாரீசுக்கு தப்பிச் சென்று, அங்கு தொடர்ந்து இருக்க முடியாமல், எப்படியும் கைது செய்யப்படுவோம் என்று அறிந்து தொடர் வண்டியில் வந்து கொண்டிருக்கையில் விக்டோரியா ஸ்டேஷன் அருகில் பிடிபட்டார்.

அதே ஆண்டு டிசம்பர் 24-ஆம் நாள் 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். அந்தமான் தீவுக்குக் கப்பலில் கொண்டு செல்லப்பட்டு 1911-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் நாள் சிறையிலடைக்கப்பட்டார். சிறைக்குக் கொண்டு வரப்பட்டவுடன், 6 மாதம் கழித்து ஒரு கருணை மனு எழுதி பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார், கருணை மனு வீரரான சவார்க்கர். அது கண்டுகொள்ளப்படாமல் போகவே மீண்டும் அதை நினைவூட்டி 1913-ஆம் ஆண்டு நவம்பர் 13-இல் ‘புகழ்பெற்ற’ கருணை மனுவினை அனுப்பிவைத்தார்.

கருணை மனுப் போர் தொடுப்பதில் மட்டும், என்றும் சளைக்காத மன்னிப்புக் கடித மாவீரராகவே திகழ்ந்தார் அவர். அந்தமானில் அடைக்கப்பட்டபோதும் சரி, காந்தியார் படுகொலையில் சிறையில் இருந்தபோதும் சரி – அவர் எழுதிய கருணை மனுக்கள் மாதிரியாகக் கொள்ளப்பட வேண்டியவை. அதிலும், தடாலடியாகக் காலில் விழுந்து மன்னிப்பு கேட்பது போன்று எழுதுவது சவர்க்கரின் தனிச்சிறப்பு.

அந்தமானில் சவர்க்காரின் சிறை வாழ்க்கை நிறைய சுவாரசியமானது. அவருடன் சிறையிலிருந்த 92 வயதான தினேஷ் குப்தா என்பவர் ஆக. 9, 2003 அன்று டில்லியில் அளித்த ஒரு பேட்டியில்,

“வி.டி. சவர்க்காரும் நானும் ஒன்றாக சிறையில் இருந்தவர்கள். அவர் ஒன்றும் சிறையிலேயே உயிரைவிட்டு விடவில்லை. சிறையிலேயே உயிரைப் பறிகொடுத்த 8 விடுதலை தியாகிகளுக்கு அவர்களின் நினைவைப் போற்ற போர்ட்ப்ளேயரில் வைக்கப்பட்டிருக்கும் சிலைகளுக்கு மத்தியில் சவர்க்காரின் சிலையையும் வைத்திருப்பது அந்த மற்ற விடுதலை வீரர்களையும் அவமானப்படுத்துவதாகும். மேலும் ஆங்கிலேயர் ஆட்சிக்கு உதவுவதாகக் கூறி மன்னிப்புக் கடிதம் எழுதியனுப்பிய சவர்க்காரை விடுதலைப் போராட்டத் தியாகியாக சித்திரிப்பது மாபெரும் தவறாகும்; தாங்கமுடியாத துன்பமாகும்” என்று குறிப்பிட்டார்.

அவருடன் சிறையிலிருந்த விஸ்வநாத் மாத்தூர் என்பவர், “ஒரு கோழையைப் புரட்சியாளனாக தூக்கி நிறுத்துவது கேலிக் கூத்தாகும்” என்று கடந்த பி.ஜே.பி. ஆட்சியில் சவர்க்கார் படத்தை நாடாளுமன்றத்தில் வைத்தபோது தனது கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

தினேஷ் குப்தாவும், மாத்தூரும் மட்டுமல்ல, சவார்க்கருடன் சிறையில் இருந்த வங்காளத்தின் திரிலோகநாத் சக்ரவர்த்தி அவர்கள் தனது சுயசரிதை நூலில் தங்களை சிறை அதிகாரிகளுக்கு எதிராகப் போராடத்தூண்டி விட்டு, தான் மட்டும் (சவார்க்கர்) நல்ல பிள்ளையாக இருந்து உண்ணாவிரதத்தில் கலந்து கொள்ளாமல் விட்டதைக் குறிப்பிட்டிருக்கிறார். இதை சவார்க்கரும் ‘அந்தமானில் எனது ஆண்டுகள்’ என்ற நூலில் ஒப்புக் கொண்டுள்ளதாக பிரபல வரலாற்றாளர் பிபின் சந்திரா கூறுகிறார்.

1911-ஆம் ஆண்டு சவார்க்கர் எழுதிய கருணை மனுவில் “1906-07 ஆம் ஆண்டுகளில் இந்தியாவில் நிலவிய நம்பகத் தன்மையற்ற சூழலினால் நாங்கள் பாதை தவறிவிட நேரிட்டது. நாட்டின் நன்மையிலும், மனித நேயத்திலும் அக்கறை கொண்ட யாரும் தவறான பாதையில் செல்ல விரும்பமாட்டார்கள். எனவே பெருந்தன்மை வாய்ந்த அரசு என்னை மன்னித்து விடுதலை செய்தால் நான் விசுவாசமாக இருப்பதோடு, இந்தியா மற்றும் வெளிநாடுகளில் தவறான பாதை செல்வோரையும் என் வழிக்கு மாற்றுவேன்… எனவே பாதை தவறிய இந்த பிள்ளை பெற்றோரிடம் மன்னிப்புக் கோருவதில் தவறில்லை” என்று குறிப்பிடுகிறார்.

இப்படியாக, அந்தமானில் சவார்க்கரின் வீர, தீர, தியாகப் பெருவாழ்க்கை நிறைவுற்று 1921-ஆம் ஆண்டு மே 2-ஆம் நாள் அங்கிருந்து மாற்றப்பட்டு, 1921-24 ஆம் ஆண்டுகளில் வங்காளத்தின் அலிப்பூர் சிறையிலும், மகாராஷ்டிராவின் ரத்னகிரியிலும் சிறைவைக்கப்பட்டு, 1924-ஆம் ஆண்டு ஜனவரி 6-ஆம் நாள் இரு நிபந்தனைகளுடன் விடுதலையானார் சவார்க்கர்.

1. ரத்னகிரி மாவட்டத்தை விட்டு அனுமதியின்றி வெளியேறுவதில்லை.

2.நேரடி அரசியலில் பங்கேற்று பிரிட்டிஷ் அரசுக்கெதிராகப் போராடுவதில்லை என்பவை அந்த நிபந்தனைகள்.

சொன்னபடி செய்து பிரிட்டிஷ் அரசுக்கு ஆதரவாக ஆள் திரட்டும் பணியில் விடுதலையான பிறகு அவர் ஈடுபட்டார். அவரது தலைமையில், காந்தியார் கொலை வழக்கில் இரண்டாவது குற்றவாளியான நாராயண ஆப்தே மகாராஷ்டிரத்தில் இந்து மகாசபைக்கும், பிரிட்டிஷ் இராணுவத்திற்கும் ஆள் எடுக்கும் பணியில் ஈ டுபட்டு அதற்காக அரசாங்கத்திடமிருந்து உரிய ஊக்கத் தொகையையும் பெற்று வந்தார்.

இந்து மகா சபையையும், ஆர்.எஸ்.எசையும் கொண்டு, இந்துத்வாவைக் கட்டமைக்கப் பணியாற்றினார். சவார்க்கர் தன்னை ஒரு நாத்திகர் என்று குறிப்பிட்டுக் கொண்டாலும் கலாச்சார தேசியமாக இந்துத்துவத்தின் அடித்தளத்தில் இந்து அரசை நிறுவுவதே பணியாகக் கொண்டிருந்தார். 1924-ஆம் ஆண்டு விடுதலையான சவர்க்கார் 5 ஆண்டுகளுக்கு அரசியல் நடவடிக்கைகளில் ஈ டுபடுவதில்லை என்று தெளிவுபடுத்தியும், மேலும் அரசு அந்தக் காலக் கெடுவை நீட்டிப்பதாக இருந்தாலும், அரசின் முடிவுக்குக் கட்டுப்பட்டு நடக்கப் போவதாகும். 1925-ஆம் ஆண்டு ஒரு கடிதத்தை எழுதி காவல் துறையினருக்கு அனுப்பி வைத்தார்.

காந்தியார் கொலை வழக்கு செங்கோட்டையின் தனி விசாரணை அரங்கிற்குள் நடத்தப்பட்டபோது, அதில் வீர(!) சவார்க்கர் மட்டுமே தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லையென்றும், தன்னால் எந்தத் தீங்கும் நேரவில்லையென்றும் புலம்பியபடியே பேசியவர். சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டபோது காவல் துறையினருக்கு அவர் எழுதிய கடிதத்திலும் அவ்வாறே குறிப்பிட்டிருந்தார் அது நிராகரிக்கப்பட்டது.

பரபரப்பான அந்த கொலை வழக்கில் நீதிபதி ஆத்மசரண் அவர்களால் “குற்றம் நிரூபணமாக போதிய ஆதாரம் இல்லை” என்று விடுவிக்கப் பட்டார் சவார்க்கர். காரணம் மேற்கூறிய திட்டத்தில் சவார்க்கரின் பெயர் இடம் பெறாதபடி நேரடி முக்கியக் குற்றவாளிகளான நாதுராம் கோட்சேவும், நாராயண ஆப்தேவும் அளித்த வாக்குமூலங்கள்.

நீதிமன்றத்திலோ சவார்க்கர் வெளியிட்ட கருத்து அவரது தீரத்தை (!) வெளிப்படுத்தியது. ‘கோட்சேயும், ஆப்தேயும் தங்களை பூனாவில் உள்ள மகாசபை வீரர்கள் என்று அறிமுகப்படுத்திக் கொண்டதாகக் கூறினார். ஆனால், 1937-ஆம் ஆண்டு முதல் கோட்சேவுக்கும் சவார்க்கருக்கும் இருந்த தொடர்பு வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட ஒன்று. சவார்க்கரின் மேற்பார்வையில் கோட்சே நடத்திய இந்துராஷ்டிரா இதழும், கோபால் கோட்சேயின் வாக்கு மூலங்களும் தனஞ்செய்கீரின் (சவார்க்கரின் வாழ்க்கை வரலாற்று ஆசிரியர்) நூலுமே சாட்சி.

இந்த வழக்கு விசாரணையிலும் ஒரு கூத்து. வழக்கில் இருந்த மற்ற அனைவரி டமிருந்தும் தனித்துக் காணப்பட்டவராகவும், சோகமே வடிவான முகத்தைக் காட்டிக் கொண்டிருந்தவராகவும் சவார்க்கர் காணப்பட்டார். தூக்கு மேடை ஏறும் முன் கோட்சேயின் கடைசித் துயரமே, தனது குருஜி தன்னைக் கண்டு கொள்ளவில்லை என்பதுதான்.

எங்கும், எதிலும், எப்போதும் பட்டப்பெயரைத்தவிர வீரத்திற்கும், சவார்க்கருக்கும் நெருக்கம் இருந்ததே இல்லை.

நன்றி: உண்மை மாதமிருமுறை இதழ்

<a href = http://www.keetru.com/info_box/history/savarkaar.html>படித்தது </a>

ஆர்.எஸ்.எஸ், கோழை, பச்சோந்தி இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google photo

You are commenting using your Google account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: