கடந்த சில நாட்களாக வவுனியா பகுதிகளில் நடைபெற்ற சண்டையில் 156 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளதாக தமக்கு தகவல்கள் கிடைத்துள்ளதாக இலங்கை ஐக்கிய தேசியக் கட்சியின் செய்தித்துறை தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: “விடுதலைப் புலிகள் வசம் 95 சடலங்கள் இருக்கின்றன. அவை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளிக்கப்பட உள்ளன. இந்த மோதல்களில் விடுதலைப் புலிகள் இலங்கை இராணுவத்தின் இரு டாங்கிகளை எடுத்துச் சென்றுள்ளதுடன் 10 கொள்கலன்களில் உள்ள வெடிபொருட்கள் மற்றும் கனரக ஆயுதங்களையும் அழித்துள்ளனர். இலங்கை இராணுவத்திற்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய இவ்வளவு உக்கிரமான மோதல் நடைபெற்ற சமயம் இல்லங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவிற்கு பறந்து விட்டார். மோசமான நிலைமையில் அவர் தனது கடமையை மறந்து எவ்வாறு அமெரிக்கா செல்லலாம்? ராஜபக்ச குடும்பத்தினர் அதிகாரத்தில் உள்ள போது தங்களால் முடிந்த அளவிற்கு தமது பைகளை நிரப்பி வருகின்றனர். பின்னர் அவர்கள் அவரவர் இடத்திற்கு சென்று விடுவார்கள்” என்று பேசினார். லக்ஸ்மன் கிரியெல்லாவின் இப்பேச்சைக் குறித்து இராணுவ பேச்சாளர்ர் பிரசாத் சமரசிங்க கருத்து கூறுகையில், “விடுதலைப் புலிகள் 13 இராணுவத்தினரின் சடலங்களை அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்துள்ளனர், எனினும் நான் இராணுவப் பேச்சாளராக இருப்பதால் அரசியல்வாதிகளின் அறிக்கைகளுக்கு என்னால் பதிலளிக்க முடியாது” என்று கூறினார். |
மறுமொழியொன்றை இடுங்கள்