இது கதையல்ல!

குடும்பத்தின் நல்லது கெட்டது எல்லா காரியங்களுக்கும் அய்யரை எதிர்பார்த்துக் காத்துக் கிடப்பது பரசுராமனுக்கு வழக்கமாகி விட்டது. ‘அய்யர் இல்லாமல் மனிதர்களின் எந்த சடங்கு, சம்பிரதாயங்களும் முழுமையாகாது’ என்று தாம் கொண்ட கொள்கையில் கொஞ்சமும் மாறாமல் புதுமனை புகுவிழா வைபவத்திற்கு அய்யரின் வருகையை ஆவலுடன் எதிர்நோக்கி தெருவுக்கும் வீட்டுக்கும் இடையில் ஆசுவாசமாக நடைபயணத்தைத் துவக்கினார் பரசுராமன். ஆனால் பரசுராமனைப் போல் எதிர்பார்ப்புடன் எல்லோராலும் காத்திருக்க இயலவில்லை. “மணி ஏழேகால் ஆகுது. எங்க இந்த அய்யர் இன்னும் காணல?” என்று அனைவரும் ‘கோரஸாக’ முணு முணுக்கத் தொடங்கினர்.

“ராமகிருஷ்ண அய்யர் ஒருத்தர விட்டா ஊர் உலகத்துல வேற அய்யருங்களே இல்லாத மாதிரி…” என்று மாமனார் மீது எரிச்சலுற்ற மனைவியை அமைதிப்படுத்திய லோகநாதன் அய்யர் விஷயத்தில் தந்தையின் மீது தனக்கு ஏற்படும் கோபத்தை வேலைகளின் வழியில் தணிக்க செய்த முயற்சி வீணாயிற்று.

அய்யர் வந்து நடத்த வேண்டிய சடங்கு ஒன்று தவிர புதுமனை புகுவிழாவுக்கான அனைத்துச் சம்பிரதாயங்களும் எப்போதோ நடந்து முடிந்திருந்தன. அரசு வங்கி ஊழியன் லோகநாதனும் அவனது சகதர்மிணி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியை சாரதாவும் இணைந்து கடன் உடனாகக் கொடுத்த பணத்துடன் கம்பி, கல், மணல், சிமெண்ட் கூட்டுறவில் தமது இரத்தத்தை வேர்வையாகக் கலந்து வீட்டை நல்ல முறையில் உருவாக்கிய கொத்தனார்கள் மற்றும் ஆண் சிற்றாள்கள், முன்னிரவில் உள்ளே ஊற்றிக்கொண்டே உற்சாக பானத்தின் உதவியில் விழித்திருந்து நள்ளிரவு நேரத்தில் வீட்டெதிரில் முதலாவது சடங்காக வைக்கோல் பொம்மையை எரித்து கண்திருஷ்டியைக் கழித்தனர். கூடவே உள்ளே குங்குமம் குழைந்த கல்யாணப் பூசணிக்காயின் மேல் கற்பூரத்தைக் கொளுத்தி வீட்டை வலம் இடமாகச் சுற்றி வந்து ‘சைவ பலி’யைச் செய்து முடித்தனர். பூசணிக்காயில் பொதிந்துக் கிடந்த குங்குமத்தை இரண்டு கைகளிலும் தாராளமாக ஏற்றிக் கொண்ட தலைமைக் கொத்தனார் அந்த சிவப்பு அடையாளத்தை ஓங்கி உயர்ந்து நின்ற தலைவாசற் காலின் இருபுறமும் அழுந்தப் பதித்து ‘எங்க வேல முடிஞ்சது’ என்று அறிவிப்பு செய்தார்.

விடிந்தும் விடியாத வைகறையில் மாலை, மஞ்சள், குங்குமம் அழகில் மங்களமாக நின்ற பசுவும் அதன் கன்றும் வீட்டுக்குள் கொண்டுவரப் பட்டன. அரண்மனை போன்ற அழகிய வீட்டின் புது வண்ணப் பொலிவில், எண்ண இயலாத சிறிய, பெரிய விளக்குகளின் கண்ணைப் பறிக்கும் ஒளியில், காது கிழிபட உரத்து ஒலித்த ‘லேட்டஸ்ட்’ திரைப்படப் பாடலின் அதிரடியில் அரண்டு மிரண்டு போன அந்த வாயில்லாத் தாயும், சேயும் விசாலமான கூடத்தில் தடதடவென மூத்திரம் ஊற்றி, தளதளவென சாணியைக் கழிந்து புதிய இல்லத்திற்கு தாங்கள் செய்து தர வேண்டிய சடங்கினை குறையில்லாமல் செய்து ‘விட்டால் போதும்’ என்று வெளியேறின. மாடியில் விருந்து வைபவம் நான்காவது பந்தி என்னும் கணக்கில் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தது.
இன்னும் அய்யர் வந்து சேரவில்லை.

இரண்டு ஆண்டுகளுக்கும் முன்பும் ஒருநாள் ராமகிருஷ்ண அய்யரின் வருகைக்காக பரசுராமனின் குடும்பம் இன்றுபோல அன்றும் இப்படித்தான் காத்திருந்தது.
பத்து நாள் படுக்கையில் திடீரென வாழ்வை முடித்துக் கொண்ட மனைவியின் பதினாறாம் நாள் இறுதிக் காரியத்திற்கு பரசுராமன், ராமகிருஷ்ண அய்யரை தமது தனித்த விருப்பத்தின் பேரில் அழைத்திருந்தார். உப்புச்சப்பற்ற – ஒன்றுமில்லாத காரியங்களுக்கெல்லாம் ஒருவரையொருவர் முறைத்துக் கொள்ளும் பரசுராமனின் பங்காளிகள் அனைவரும் அன்று ஒற்றுமையுடன் மழுங்க முகம் சிரைத்துக் கொண்டு அய்யரின் வருகைக்காக ‘வழிமேல் விழி வைத்து’ அரைமணி நேரமாகக் காத்திருந்தனர். இரண்டு தமக்கைகள், ஒரு தங்கை என்னும் ஒழுங்கில் வீட்டிற்கு ஒற்றைப் பிள்ளையான லோகநாதனுக்கு மைத்துனர்கள், சகோதரிகள் மற்றும் உறவினர்களை திருப்தி செய்யும் முறையில் கடமைகள் நிறைந்து கிடந்தன.

ஆனால் பரசுராமனின் பிடிவாத விருப்பத்தின் விளைவில் கூடியிருந்த அனைவரும் ராமகிருஷ்ணன் என்னும் ஒற்றை மனிதருக்காக காத்துக் கிடக்க வேண்டிய நிர்ப்பந்தம் நேர்ந்தது.

அய்யரின் வருகையை எதிர்பார்த்து எதிர்பார்த்து அனைவரும் ஓய்ந்த நேரத்தில் ராமகிருஷ்ணன் இளமை, முதுமை, இணையான வயதுகளில் மூன்று அய்யர்களை உடன் அழைத்து வந்து ஓய்ந்தவர்களுக்கு அதிசய – அதிர்ச்சி தரிசனம் அருள் பாலித்தார்
“என்ன சாமி, நாலு அய்யரு ஒன்னா வந்திருக்கீங்க?” என்ற பரசுராமனின் கேள்விக்கு ராமகிருஷ்ணன் புன்னகை மன்னனாக குழைந்த குரலில் பதிலைக் கூறினார்.

நடேசனும், அவன் மனைவி பார்வதியும் ‘பரசுராம நாட்டாம ரெண்டு பேர் உழைப்புக்கு – கஷ்டத்துக்கு நியாயமா கூலி கொடுப்பார்’ என்னும் நமபிக்கையில் பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் முன் பரசுராமனிடம் எந்த பேரமும் பேசவில்லை. தோட்டத்துப் புளிய மர நிழலையும் மீறி வறுத்தெடுத்த வெய்யிலின் உக்ரத்தில் இரண்டு ஜீவன்கள் குறையாமல் ஆறு மணி நேரம் செய்த கடின வேலைக்கு பரசுராமன் ‘கொடுப்பதே அதிகம்’ என்னும் நினைப்புடன் நடேசனிடம் “இந்தாடா!” என்று புதிய நூறு ரூபாய்த் தாளை நீட்டினார்.

“பெரிய ஆத்து பெரியவா காரியம் பேஷா நடக்கணுமோன்னா அதா இவாளும் கூட இருந்தா நல்லதுன்னு அழைச்சாந்தேன். நாலு பிராம்மணாள் ஒன்னா நடத்துற காரியத்தால மோட்சமடைந்துவிட்ட அம்மாவுக்கும், ஆத்துல உள்ளவா அத்தனைப் பேருக்கும் நிறைய புண்ணியம் சேரும்; நல்லது நடக்கும். பக்கம் பத்து ஊருக்குப் பெரியவா நீங்க, சேர்க்கைக்கு பையனும், மாட்டுப்பொண்ணும் நல்ல உத்தியோகத்துல இருக்கறவா. நீங்க மறுத்துச் சொல்ல மாட்டேள்ன்ற நம்பிக்கைலதா இவாளும் வந்திருக்கா. என்ன காரியம் ஆரம்பிக்கலாந்தானே?”

“ஆரம்பிக்கலாம்” என்று அய்யருக்குப் பளிச்சென பதில் சொன்ன பரசுராமன் ‘ராமகிருஷ்ணனுடன் வந்திருக்கும் மூன்று அய்யர்களுக்கும் மரியாதை செய்ய வேண்டும்’ என்னும் முடிவில் வேட்டி, துண்டு வாங்கி வர பக்கத்து டவுனுக்குப் போய் வரும்படி உறவினர் ஒருவருக்கு உத்தரவிட்டார்.

“முன்னறிவிப்பு எதுவுமில்லாம திடீர்னு கூட மூணு பேர அய்யர் கூட்டிவந்ததுக்கு நாம என்ன செய்ய முடியும்? அய்யருக்கு வீடு தேடி வந்துட்ட மரியாதைக்கு தலைக்கு தலா இவ்வளவுன்னு ஏதாவது ஒரு தொகை கொடுத்தனுப்பினா போதாதா?” என்ற லோகநாதனின் பேச்சு பரசுராமனிடன் எடுபடவில்லை. அவர் ‘அய்யர்கள் அனைவருக்கும் வேட்டி, துண்டு மரியாதையைத் தவறாமல் செய்ய வேண்டும்’ என்று பிடிவாதமாக நின்றார். “இந்த ராமகிருஷ்ண அய்யர் செஞ்சது கொஞ்சங்கூட சரியில்ல. இதுக்கப்புறம் உங்க இஷ்டம்” ‘அப்பாவிடம் இதற்கு மேல் பேசுவதில் அர்த்தமில்லை’ என்னும் உறுதியில் லோகநாதன் தாயின் காரியத்தை தந்தையின் பொறுப்பில் முழுதாக ஒப்படைத்து கோபத்துடன் ஒதுங்கிக் கொண்டான்.

பரசுராமனுக்கும், லோகநாதனுக்கும் அவர்களின் பங்காளிகள் அனைவருக்கும் வலதுகை மோதிர விரலில் தர்ப்பைப் புல் மோதிரத்தை அணிவித்த அய்யர்கள் ஆல், அரசு வரிசையில் ஒன்பது வகை கிரக க்ஷமித்துக்களை இரையாகக் கொண்டு செங்கல் சதுரத்துக்குள் சுடர்ந்து எரியும் தீயில் அனைவரையும் ஒருவர் பின் ஒருவராக மாவிலை வழியில் நெய்யை ஊற்றச் சொன்னார்கள். கூடியிருப்பவர்கள் யாருக்கும் புரியாத முணு முணு மந்திரங்களின் முடிவில் அனைவர் நெற்றியிலும் ஓமகுண்டத்தின் கரியைக் குழைத்து திலகமாக அணிவித்து காரியத்தை ஒரு வழியாக நிறைவு செய்தார்கள்.

மனதுக்குகந்த மனைவியின் இறுதிக் காரியத்தை இதுவரை ஊரில் நடக்காத அதிசயமாக நான்கு அய்யர்கள் சேர்ந்து நடத்தியதில் பரசுராமனுக்குப் பெருமை பிடிபட வில்ல. ராமகிருஷ்ண அய்யருக்கு வேட்டி, துண்டு, வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம் இவைகளுடன் நூறு ரூபாயைத் தாம்பாளத்தில் வைத்து தட்சணையாக வழங்கியவர் மற்ற மூவருக்கும் வேட்டி, துண்டு வகையறாக்களுடன் தலைக்கு அய்ம்பது ரூபாய் என்று கொடை வள்ளலாகக் கொடுத்தார். கூடவே அனைவருக்கும் இரண்டு படி பொன்னி பச்சரிசி, அரை கிலோ அளவில் துவரம் பருப்பு, கத்தரிக்காய், வாழைக்காய், மிளகாய், புளி எல்லாவற்றையும் உபரியாக எடுத்து வைத்தார்.

தந்தையின் செயலில் வெறுத்துப்போன லோகநாதன் ‘நடப்பது எதுவும் தனக்குச் சம்பந்தமற்றது’ என்னும் பாவனையில் நடப்பதை வேடிக்கை பார்க்கும் நான்காவது மனிதனாக அன்று தூர ஒதுங்கிக் கொண்டான்.

ஆனால் இன்று?

அய்யரின் அரைமணி நேர அநியாய பொழுது போக்குக்கு நூறு ரூபாய், வேட்டி, துண்டு, பருப்பு, பச்சரிசி, காய்கறிகள் என்று தாராளமாக வாரி வழங்கிய தந்தையை உழைத்தவர்களை மதிக்காத அவரது அடுத்ததொரு செயலுக்கு லோகநாதன் கடுமையாக எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.

ராமகிருஷ்ண அய்யரின் ஒன்றும் விளங்காத மந்திர முணு முணுப்புக்கு அறுநூறு, எழுநூறு ரூபாய்கள் மதிப்பில் மரியாதை செய்து அனுப்பி வைத்த பரசுராமன் ஆயிரம் பேர் சாப்பிட விருந்து தயாரித்த அண்டா, குண்டான்கள் அனைத்தையும் காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு வரை ஓய்வு ஒழிச்சலில்லாமல் இடுப்பொடிய கழுவி முடித்த ஏழை மனிதர்களிடம் அடாவடி நடத்தினார்.

கிராமத்தின் ஒற்றைக் குடியான இருளர் சாதியைச் சேர்ந்த நடேசனும், அவன் மனைவி பார்வதியும் ‘பரசுராம நாட்டாம ரெண்டு பேர் உழைப்புக்கு – கஷ்டத்துக்கு நியாயமா கூலி கொடுப்பார்’ என்னும் நம்பிக்கையில் பாத்திரங்களைக் கழுவ ஆரம்பிக்கும் முன் பரசுராமனிடம் எந்த பேரமும் பேசவில்லை. தோட்டத்துப் புளிய மர நிழலையும் மீறி வறுத்தெடுத்த வெய்யிலின் உக்ரத்தில் இரண்டு ஜீவன்கள் குறையாமல் ஆறு மணி நேரம் செய்த கடின வேலைக்கு பரசுராமன் ‘கொடுப்பதே அதிகம்’ என்னும் நினைப்புடன் நடேசனிடம் “இந்தாடா!” என்று புதிய நூறு ரூபாய்த் தாளை நீட்டினார். நடேசன் “சாமி, காலையிலேர்ந்து இந்த நேரம் வரைக்கும் எலும்பு தேயக் கஷ்டப் பட்டிருக்கிறோம். நாங்க ஒன்னும் அதிகமா கேக்கல. இன்னும் ஒரு அம்பது ரூபா சேத்துக் குடுங்க!” என்று இரண்டு கைகளையும் விரித்து பணிவுடன் வேண்டினான்.

“டேய், இப்ப வந்து இப்படி பேரம் பேசறவன் வேலைய ஆரம்பிக்கறதுக்கு முன்னயே ‘இவ்வளவு குடுங்க’ன்னு கேட்டு செய்ய வேண்டியது-தானேடா?”
“கஷ்டத்துக்கேத்த கூலிய மொதலாளி கேக்காமக் குடுப்பீங்கன்ற நம்பிக்கைலதா” என்று தலையைச் சொறிந்தான் நடேசன்.

“காலையிலேர்ந்து இவ்ளோ நேரத்துக்கு எலி வளைங்கள தோண்டியிருந்தா கூட கொறஞ்சது இருவது எலி கெடச்சிருக்கும். அம்பது ரூபா போட்டுக் குடுங்க மொதலாளி!” என்று பார்வதி தன் பங்குக்கு கைகளைக் குவித்துக் கும்பிட்டு பரசுராமனிடம் கெஞ்சினாள்.

நடப்பது அனைத்தையும் வேடிக்கை போல சிறிது நேரம் அமைதியுடன் கவனித்த லோகநாதன் தந்தையை வீட்டுக்குள் கூப்பிட்டான்.

“ஏழேகால் மணிக்கு ஆனை மாதிரி ஆற அமர ஆடி அசைஞ்சி வந்து, உடம்பு நோகாம ஓமம் வளர்த்து, நாக்குப் புரளாம நாலு மந்திரம் சொல்லி ‘டாண்’னு ஏழே முக்காலுக்கு இடத்த காலி செய்துட்ட ராமகிருஷ்ண அய்யருக்கு தட்சணைன்ற பேர்ல தாராளமா கொடுத்தீங்க. ஆனா இவங்களுக்கு…” சொல்லிக்கொண்டே கூடத்தைத் தாண்டி புதுமனை புகுவிழா பலகாரங்கள் பாதுகாக்கப்பட்டிந்த அறைக்குள் சென்ற லோகநாதன் வாழையிலை ஒன்றினுள் ஆறு லட்டுகளை, அதனுடன் இரண்டு வாழைப் பழங்களை, வெற்றிலைப் பாக்கை அடக்கி எடுத்து வந்தான். கூடத்தில் அமர்ந்திருந்த தந்தை தெளிவாகப் பார்க்கும் வகையில் “அப்பா கிட்ட நீங்க கூடுதலா கேட்டது அம்பது. இந்தாங்க மேல பத்து. அறுபது. சந்தோஷமா போய்ட்டு வாங்க!” என்று உரக்கச் சொல்லி ஆறு பத்து ரூபாய்த் தாள்களுடன் சேர்ந்ததாக அந்த லட்டுப் பொட்டலத்தை நடேசனின் கையில் அன்புடன் வைத்தான்.

படித்தது

சிந்தனைகள் இல் பதிவிடப்பட்டது . Leave a Comment »

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

%d bloggers like this: