இலங்கையின் வட பகுதியில் ராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் இலங்கை இராணுவத்திற்கு பலத்த பாதிப்பு ஏற்பட்டது. இதில் 20 ராணுவத்தினர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கையின் வடக்கு பகுதிகளான வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு இடையில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளின் ஊடாக இலங்கை ராணுவத்தினர் முன்னேறி வந்தனர். இதையடுத்து அவர்கள் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்த துவங்கினர். அதிபர் ராஜபக்ஷே பதவி ஏற்ற பின்னர் தொடர்ந்து இதுபோன்ற தாக்குதல்கள் இரு தரப்பிலும் நடந்து வருகிறது.
நேற்றைய தாக்குதலில் ராணுவத்தை சேர்ந்த 20 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 40 பேர் படுகாயம் அடைந்தனர். விடுதலைப்புலிகள் இந்த த்ஆக்குதலில் ராணுவத்தின் ஒரு முகாமை முற்றிலுமாக அழித்ததோடு, அங்கு இருந்த ஆயுதங்களையும் பறிமுதல் செய்தனர். மேலும் விடுதலைப் புலிகளின் பகுதியில் இருந்து ராணுவத்தினர் முழுவதுமாக விரட்டி அடிக்கப்பட்டனர்.
இந்த தகவலை விடுதலைப் புலிகளின் செய்தி தொடர்பாளர் ராசையா இளந்திரையன் தெரிவித்தார். இது விடுதலைப் புலிகளின் இணைய தளத்திலும் வெளியிடப் பட்டுள்ளது. ஆனால், இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பு சேதம் குறித்து எந்த தகவலும் இல்லை.
இது குறித்து இலங்கை ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “விடுதலைப் புலிகளுடன் நடந்த சண்டையில் 3 ராணுவ வீரர்கள் மட்டுமே கொல்லப்பட்டனர். 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் கடும் சேதம் ஏற்பட்டது” என்று குறிப்பிட்டுள்ளது.
மறுமொழியொன்றை இடுங்கள்